சூடான செய்திகள் 1

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு

(UTV|COLOMBO)-நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொள்ளலுள்ளார். இன்று (30) முற்பகல் மொரகஹகந்த நீர்த்தேக்க திட்ட வளாகத்தையும் பார்வையிடவுள்ளார்.

ரஜரட்ட மக்களுக்காக ஜனாதிபதியின் நீண்டகால கனவை நனவாக்கும் துரித மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர்ப்பாசன திட்டமான மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் 2015 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தின் நடவடிக்கைகள் புதிய உத்வேகத்துடன், முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், கொங்றீட் அணைக்கட்டு, களிமண் அணைக்கட்டு மற்றும் கருங்கல் நிரப்பப்பட்ட அணைக்கட்டு போன்ற மூன்று அணைகளைக் கொண்ட ஒரே ஒரு நீர்த்தேக்கம் இதுவாகும்.

21ஆம் நூற்றாண்டின் பாரிய நீர்ப்பாசன புரட்சியாக அறியப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவு 460,000 ஏக்கர் அடிகளாகும். இது பராக்கிரம சமுத்திரத்தைப் போன்று சுமார் நான்கு மடங்காகும் என்பதுடன், இதன் மூலம் 82,000 ஏக்கர் வயற்காணியில் விவசாயம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வடமத்திய வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சுமார் 2,000 சிறிய மற்றும் பெரிய குளங்களுக்கு நீர் வழங்கப்படவுள்ளதுடன், வடமத்திய மாகாணத்தில் 1,600 குளங்களுக்கும் வடமேல் மாகாணத்தின் 303 குளங்களுக்கும் நீர் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் அம்மாகாணங்களின் மூன்று இலட்சம் ஏக்கர் காணிகளில் விளைச்சலை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், 15 இலட்சம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். மேலும் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியும் வழங்கப்படவுள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதுடன், நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 25 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் வருடாந்தம் 336 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருளை சேமிக்க முடியும்.

இந்நீர்த்தேக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நன்னீர் மீன் உற்பத்தி வருடாந்தம் 3 000 தொன்களாகும் என்பதுடன், இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் வருடாந்த வருமானம் 225 மில்லியன் ரூபாவாகும். மூன்று மாகாணங்களில் வாழும் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களுக்கு நேரடி பொருளாதார நன்மைகளை வழங்கும் மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின மூலம் முழு நாட்டுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கப்பெறவுள்ளன.

கடந்த ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியினால் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதுடன் மிகக் குறுகியதொரு காலப் பகுதியில் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது அதிகரித்து நீரால் நிரம்பியுள்ளமையினால் அதன் வான் கதவுகள் திறந்து வைக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

 

 

 

Related posts

அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சு தீர்மானம்

ஞானசார தேரருக்கு இன்று சத்திரச் சிகிச்சை