(UTV|COLOMBO)பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய ஒருவருக்கு அடைக்கலம் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிப்பதற்காக தாம் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவிந்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை.
மாவீரர் தினம் காரணமாக வடக்கு கிழக்கில் தாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகத்திற்குரியவரான முன்னாள் லெப்டினன் கமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சிக்கு அடைக்கலம் கொடுத்ததாக அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்காக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அழைக்கப்பட்டிருந்தபோதும், அவர் உத்தியோகபூர்வ பயணமாக மெக்சிக்கோ பயணமாகியிருந்தார்.
இதற்கு முன்னதாக 3 தடவைகள் நீதிமன்றம் அவருக்கு எதிராக ஆணை பிறப்பித்திருந்தது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 2 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.