(UTV|COLOMBO)-பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேயரில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கடந்த பல வாரங்களாக நிலவிய மழையுடனான காலநிலையினால் குளங்கள் நிரம்பியுள்ளமையால், விவசாயம் மேற்கொள்ளக்கூடிய இயலுமை உள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெனரல் பேராசிரியர் டயிள்யூ.எம்.டயிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.
விவசாயத் திணைக்களத்தின் எதிர்ப்பார்ப்பை பல ஆண்டுகளின் பின்னர் தற்போது நிறைவேற்றக்கூடிய நிலை உதயமாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 72 நீர்நிலைகளின் நீர் கொள்ளளவு 62 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அம்பாறை மாவட்டம் மற்றும் பதவிய பகுதியில் குளங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவெ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விவசாயத் திணைக்களத்திற்கு சொந்தமான 34,000 குளங்கள் சில வருடங்களுக்கு பின்னர் போதிய நீர்மட்டத்தை எட்டியுள்ளன.
இதனால், அனைத்து நீர்த்தேக்கங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் எவ்வித சிக்கலும் இன்றி பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும் என இலங்கை மகாவலி அதிகாரசபை தெரிவிக்கின்றது.