(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது, இன்று(09) கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இடம்பெற உள்ள மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு சென்றுவர அனுமதி வழங்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க சார்பான சட்டத்தரணி நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அந்தக் காலத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கியதுடன், அவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்கும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வௌியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.