(UTV|COLOMBO)-இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் 42 பதிவாகியுள்ளன. இதில் 21 சம்பவங்கள் 1947 முதல் 1978 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
1978 முதல் இதுவரையில் 21 தடவைகள் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியிலேயே அதிக தடவைகள் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1978 முதல் 1988 வரையான காலப்பகுதியில் மாத்திரம் 7 தடவைகள் பாராளுமன்றம் ஜனாதிபதியின் தலையீட்டினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் காலத்தில் 04 தடவைகள் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியில் 05 தடவைகள் பாராளுமன்ற அமர்வுகள் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் 03 தடவைகள் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 தடவைகள் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் 27 ஆம் திகதி இறுதியாக பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.