(UTV|COLOMBO)-சில வருடங்களாக நாட்டில் நிலவிய வறட்சி நிலைமை நீங்கி மழை கிடைக்கப்பெற்றுவரும் இந்த சந்தர்ப்பம் விவசாய துறையில் புதிய மாற்றமொன்றுக்காக தயாராகுவதற்கு பொருத்தமான சந்தர்ப்பமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை மட்டுப்படுத்தி சுயமுயற்சியில் முன்னேற விவசாய பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை நோக்கி நாம் துரிதமாக பயணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடுபொத, பொத்துவௌ, ஷைலதலாராம ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரத்தை திறந்து வைக்கும் புண்ணிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தினால் முகங்கொடுக்க வேண்டியுள்ள சவால்களை விளங்கி நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைவரும் கூட்டு முயற்சியில் இணைய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வரலாற்று பெருமைமிக்க அழகிய விகாரையான கடுபொத பொத்துவௌ ஷைலதலாராம ரஜமகா விகாரைக்கு நேற்று முற்பகல் சென்ற ஜனாதிபதி, முதலில் சமய கிரியைகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி தாது கோபுரத்தை திறந்துவைத்ததுடன், முதலாவது மலர் பூஜையையும் செய்தார்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள வெள்ளரச மரக்கன்றொன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க தொல்பொருட்களை பார்வையிட்டதுடன், விகாரை வளாகத்தையும் சுற்றிப்பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண கடுகம்பொல உப தலைமை சங்கநாயக்க தேரரும் பொத்துவௌ ஸ்ரீஷைலதலாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான சங்கைக்குரிய போகஹபிட்டியே தம்மிஸ்ஸர தேரர் மற்றும் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, அதுல விஜேசிங்ஹ, சாந்த பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]