(UTV|COLOMBO)-வடக்கு, கிழக்கில் செயலிழந்து கிடக்கும் கைத்தொழிற்சாலைகளை அடுத்த ஆண்டில் மீள ஆரம்பிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் தான் சமர்ப்பித்த பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் எனவும்
அவர் மேலும் குறிப்பிட்டார்.
மூடப்பட்டிருக்கும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு, வெளிநாட்டு சூழலியல் நிபுணர்கள் மற்றும் உள்நாட்டு சூழலியலாளர்கள் ஆகியோருடன் இன்று காலை (19) விஜயம் செய்த அமைச்சர், தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான களநிலவரங்களைப் பார்வையிட்ட பின்னரே, இந்த விடயத்தை தெரிவித்தார்.
“யுத்தக் கெடுபிடியினால் செயலிழந்து போன பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் 50 ஏக்கர் காணி, இராணுவத்தினரின் பிடிக்குள் சிக்கி அவர்களின் வசமிருந்தது. இராணுவ உயர்மட்டத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, தற்போது 15 ஏக்கருக்குள் அவர்கள் தமது இருப்பை சுருக்கியுள்ளனர். எனினும், இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயங்கும் போது, எஞ்சிய காணிகளையும் இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
வடக்கில், காங்கேசன்துறையில் 300 ஏக்கர் பரப்பில் சூழல் நட்புறவான கைத்தொழில் பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. முதலாம் கட்டமாக 100 ஏக்கரில் இந்த திட்டத்தை ஆரம்பிப்போம். அத்துடன், முல்லைத்தீவில் ஓட்டுத் தொழிற்சாலை, குறிஞ்சாக்கேணியில் மீள உப்பு உற்பத்தி, முல்லைத்தீவு, கொக்காவிலில் டைட்டேனியம் ஒக்சைட்டு உற்பத்தி ஆகியவற்றை ஆரம்பிக்கவிருக்கிறோம். அது மட்டுமின்றி, மட்டக்களப்பில் கடதாசித் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்போம். இவற்றை ஆரம்பிக்குமாறு பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீதரன் ஆகியோர் தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வருகின்றனர். அத்துடன் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்து வருகின்றது.
அது மாத்திரமின்றி, கிழக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்குமாறு, பிரதி அமைச்சர் அமீர் அலி உட்பட அந்த மாவட்ட எம்.பிக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தொழிற்சாலைகளை ஆரம்பித்து, வேலை வாய்ப்புக்களை உருவாக்குவோம். அந்தந்த பிரதேசங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கே தொழில் வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
ஆனையிறவில் உப்பு உற்பத்தியை மீள ஆரம்பித்துள்ளோம். மாந்தை சோல்ட்டனிலும் உப்பு உற்பத்தி திருப்திகரமான அடைவை எய்தி வருகின்றது. இறக்குமதி செய்யப்படும் உப்பு உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு, நாம் எமது இலக்கை நோக்கி பயணிக்கிறோம்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]