கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பதில் பணிப்பாளர் நாயகம் திலகரட்ன பண்டா தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அந்த தட்டுப்பாட்டிற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சந்தையில் அரிசி கிடைப்பது படிப்படியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறினார்.
அரிசி இறக்குமதி நீடிக்கப்பட்டுள்ளதால், பண்டிகைக் காலத்தில் அரிசி தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வழங்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் தொடர்பிலும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.