அரசியல்உள்நாடு

ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை

தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயணம் செய்வதற்கு  அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களை பயன்படுத்த ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதாயின் அதற்குரிய கட்டணத்தை நிச்சயம் செலுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்து பயன்படுத்தல் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள  1,052 முறைப்பாடுகள் குறித்து உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் அரசியல் கூட்டங்களில் கலந்துக் கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானங்கள் ஜனாதிபதி வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்கள் அல்லாத பிறிதொரு கடமைகளுக்காக ஹெலிக்கொப்டர்களை பயன்படுத்துபவர்களுக்கு அரச ஹெலிகொப்டர்களை வழங்குவதில் பாதிப்பில்லை எனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் செயற்பாடுகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், புகையிரதங்களை பயன்படுத்துவதாக இருந்தால் அதற்கான கட்டணத்தை செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்துவது குறித்து கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  சகல மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய 2024.07.31 ஆம் திகதி முதல்  2024.08.25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்  4 வன்முறை சம்பவங்களும், தேர்தல் சட்டத்தை மீறிய 1,006 முறைப்பாடுகளும், 42 வேறு முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.இதற்கமைய இக்காலப்பகுதியில் 1,052 முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களை பயன்படுத்தும் போது அது தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன்படுத்தப்படுகிறதா அல்லது அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துகிறாரா என்பதை வேறுப்படுத்தி பார்ப்பது சிக்கலானதாக உள்ளதாக  ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவகத்தின்  நிறைவேற்றுப் பணிப்பாளர்  மஞ்சுள கஜநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

ஷானி அபேசேகரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா

டிரான் அலஸ் உள்ளிட்ட நான்கு பேர் விடுவிப்பு