உள்நாடு

ஹிஜாஸ் விவகாரம் : ஐரோப்பிய மனித உரிமை தூதுவர்கள் அறிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்துள்ளமையானது மிகுந்த கவலைக்குரிய விடயம் என ஐரோப்பிய மனித உரிமை அமைப்பின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து, ஜேர்மனி, ஸ்வீடன், பின்லாந்து, லிதுவேனியா, எஸ்டோனியா, நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் மனித உரிமை தூதர்கள் இது தொடர்பில் உரிய செயல்முறை மற்றும் மனித உரிமையினை மதிக்குமாறு இவ்வாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த அறிக்கையில்;

“ஏப்ரல் 2020 முதல் புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு. ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் அடைத்திருப்பது எங்களை ஆழ்ந்த கவலை கொள்ள வைத்துள்ளது. பத்து மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், திரு. ஹிஸ்புல்லா இப்போது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பேச்சு தொடர்பான குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்படுவதையிட்டு நாங்கள் வருத்தப்படுகிறோம்.

“திரு. ஹிஸ்புல்லா இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகளை ஆதரிப்பதில் முன்னிலையாக இருந்த ஒரு சட்டத்தரணி, இவர் பாரபட்சமான கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர். ஒரு நாட்டில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மனித உரிமை பாதுகாவலர்களின் பங்கு முக்கியமானது என்பதை நாங்கள் கவனிக்கிறோம். மனித உரிமை பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் துன்புறுத்துவதைத் தடுப்பதற்கும் அரசாங்கங்களுக்கு சிறப்புப் பொறுப்பு உள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், சிறப்பு நடைமுறைகள் வைத்திருப்பவர்கள், இலங்கை அரசாங்கத்தை திரு. ஹிஸ்புல்லா போன்ற மனித உரிமை பாதுகாவலர்களை மதிக்குமாறு வலியுறுத்துவதில் நாங்களும் இணைந்து கொள்கிறோம்..” எனத் தெரிவித்துள்ளனர்.

Related posts

களனி பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு

பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்ய இந்தியா கடனுதவி

மேலும் பலருக்கு கொரோனா உறுதி