உள்நாடுசூடான செய்திகள் 1

ஹக்கீம், ரிஷாட், மனோ எமது கூட்டணியின் பங்காளிகளாகவே உள்ளனர் – SJB

மனோ கணேசன்,  ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் தலைமையிலான அணியினர் எமது கூட்டணியின் பங்காளிகளாகவே உள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி,  தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்வில் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை. இந்நிலையில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ்,  ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த ஜனாதிபதி மற்றும்  பாராளுமன்ற தேர்தல்களில் இருந்து எம்முடனேயே கூட்டணியின் பங்காளிகளாக பயணிக்கின்றார்கள்.

ஆகவே, அவர்களுடன் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதோடு, எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டணியின் தீர்மானங்களிலும் அவர்கள் பங்காளிகளாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்கள். ஆகவே  கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதற்காக அந்தத் தரப்புக்கள் எம்முடைய பங்காளிகளாக இல்லை என்று அர்த்தம் கொள்ள முடியாது. அவர்கள் எம்முடன் இணைந்தே அடுத்தகட்ட பயணங்களிலும் பங்கேற்கவுள்ளனர் என்றார்.

Related posts

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் புதிய இராஜதந்திரிகள்

கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இன்று இயக்கப்படும்