உள்நாடு

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு கோப் குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் தற்போதைய நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்கு இன்று (06) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக நாளை 07 ஆம் திகதி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் ஜூலை 08 ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை என்பன கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு கூடவுள்ளது.

கோப் குழுவுக்கு மேலதிகமாக பாராளுமன்ற குழுக்கள் மற்றும் பல அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கள் இந்த வாரம் கூடவுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று (06) பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம், நாளை (07) தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம் மற்றும் கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம் என்பன பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன.

அதேவேளை, இன்று (06) ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவும் கூடவுள்ளது. நாளை (07) உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடவுள்ளது.

மேலும், பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் பற்றி ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் என்பன எதிர்வரும் 08 ஆம் திகதி கூடவுள்ளதாக தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

ஹரீன், மனுஷ மீண்டும் UNPக்குள்….!