வைத்தியர் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும், வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பது நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், இது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால், கலந்துரையாடலுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நாளை (05) இடம்பெறவுள்ள வைத்தியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அதேவேளை, பொருளாதாரத்திற்கு சுமையாகாத வகையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதாரம் மேலும் சீரடையும் போது அனைத்து அரச ஊழியர்களுக்கும் அதன் பலன்களை வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மக்களை சிரமத்திற்கு உள்ளாக்காமலும், தேவையற்ற வேலைநிறுத்தங்களால் நோயாளிகளை பாதிக்காமலும் இருக்குமாறு வைத்தியர்களிடம் அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறான பின்னணியில், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் பிரிவுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட தயாராகி வருகின்றன.
இதற்கிடையில், வைத்தியர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினர்.
வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள திருத்தத்தில், சுகாதார பிரிவிற்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுமுறை ஊக்கத் தொகைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
அதன்படி, சுகாதார பிரிவின் வைத்தியர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் தற்போது வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று (03) தெரிவித்ததாவது, அரசு தீர்வு வழங்காவிட்டால் நாளை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியது.
அத்துடன், தமது சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், வரும் 6ஆம் திகதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, சுகாதார தொழில்முறை சங்கங்கள் பலவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதில், துணை வைத்திய சேவைகள், மருத்துவ ஆய்வகம், பராமரிப்பு வைத்திய சேவைகள், கதிரியக்கவியல், சிகிச்சை நிபுணர்கள், குடும்ப சுகாதார சேவை, கண் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பூச்சியியல், பல் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மருந்து கலவை நிபுணர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் அடங்குகின்றன.
இதற்கிடையில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான வைத்தியர் நலின் ஜயதிஸ்ஸ இன்று பாராளுமன்றத்தில் வைத்தியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
“அரச சேவையில் இணையும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54,290 ரூபாவாக உள்ளது. அந்த சம்பளம் 94,150 ரூபாவாக உயர்த்தப்படுகிறது. அதாவது, ஒரு வைத்தியரின் அடிப்படை சம்பளம் 39,860 ரூபாவால் அதிகரிக்கிறது.
மற்ற அனைத்து கொடுப்பனவுகளும் சேர்ந்த பின்னர், சராசரியாக ஒரு வைத்தியரின் மொத்த சம்பளம் சுமார் 240,000 ரூபாவாக இருக்கும். இதன் முதல் கட்டமாக, ஏப்ரல் மாதத்தில் மட்டும் சம்பள உயர்வாக 15,582 ரூபா கிடைக்கும்.
இரண்டாம் தரத்தில் உள்ள வைத்தியருக்கு அடிப்படை சம்பளம் 58,305 ரூபாவாக உள்ளது. அது 101,370 ரூபாவாக உயர்கிறது. அதாவது, அடிப்படை சம்பளம் 43,065 ரூபாவால் அதிகரிக்கிறது.
முதல் தரத்தில் உள்ள வைத்தியருக்கு தற்போதைய அடிப்படை சம்பளம் 71,805 ரூபாவாக உள்ளது. அது 125,670 ரூபாவாக உயர்கிறது. அடிப்படை சம்பள உயர்வு 53,865 ரூபாவாகும்.
ஜூனியர் விசேட வைத்திய நிபுணர்களுக்கு தற்போது கிடைக்கும் அடிப்படை சம்பளம் 88,000 ரூபாவாக உள்ளது. அது 156,000 ரூபாவாக உயர்கிறது. அடிப்படை சம்பள உயர்வு 68,000 ரூபாவாகும்.
இந்த அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதி இந்த ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் என்றும், மற்றொரு பகுதி 2026 ஜனவரி மற்றும் 2027 ஜனவரி மாதங்களில், அதாவது 20 மாதங்களுக்குள் 40,000 முதல் 68,000 ரூபா வரையிலான சம்பள உயர்வுகள் கிடைக்கும் என்றும்,” அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.