கேகாலை பொது மருத்துவமனையின் சிரேஷ்ட பல் மற்றும் வாய்வழி அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் இன்று (29) காலை வைத்தியசாலை வளாகத்துக்குள் ஒரு நபரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்துக்குள் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் மீது குறித்த மருத்துவர் மோதியதாகக் கூறி ஒரு நபரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வைத்தியர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மருத்துவ நிபுணர்கள், சுகாதார தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது, இதற்கு பதிலளிக்கும் விதமாக, சங்கத்தின் நிர்வாகக் குழு கேகாலை மாவட்டத்தில் நாளை (30) நண்பகல் வரை அடையாள வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் அவசரமாகத் தலையிட வேண்டும் என்று சங்கம் வலியுறுத்துகிறது.
இதற்கிடையில், அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவ நிபுணர்கள் சங்கமும் தனது ஆதரவை வழங்கியுள்ளதுடன், சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.