உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக நாளை (03) வரை தேர்தல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) மீண்டும் குறித்த தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில், பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைச் சமர்ப்பித்த வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டது.
அதன்படி, ஏற்கனவே ஏற்றுக்கொள்வதற்கு இணக்கம் வௌியிடப்பட்ட வேட்புமனுக்கள் தவிர, ஏனைய வேட்பமனுக்களுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக நாளை வரை நடவடிக்கைகள் எடுப்பதைத் தடைசெய்து நீதிமன்றம் மேலும் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பின்னர் இந்த வழக்கின் மேலதிக பரிசீலனை இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சர்வஜன அதிகாரம் மற்றும் சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட கட்சிகள் இதுவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சுமார் 30 மனுக்களை தாக்கல் செய்துள்ளன.