(UTV|கொழும்பு)- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது மாநாட்டில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தலைமையிலான தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பேச்லெட்டை நேற்று(28) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
40/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவையும், அவ்வாறு செய்வதற்கான அடிப்படையையும் அமைச்சர் இதன்போது உயர்ஸ்தானிகரிடம் மீண்டும் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணை அனுசரணையிலிருந்து விலகியிருந்தாலும், அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை அடைவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அமைச்சர் தினேஸ் குணவர்தன வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்றமை தொடர்பில் அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்துள்ளதுடன், தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமைக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் என்பனவற்றுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டியுள்ளார்.