அரசியல்உள்நாடு

வெகுவிரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கல் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இம்மாதம் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதிக்குள் தாம் போட்டியிட்ட தேர்தல் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தமது பிரச்சார செலவுகளை குறித்த காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தலில் வெற்றிப் பெற்ற மற்றும் வெற்றிப் பெறாத சகல வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சார செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது குறித்த காலப்பகுதிக்குள் செலவு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காத தரப்பினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை சிறந்த முறையில் நடத்தி முடித்துள்ளோம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கான தேவை காணப்படுகிறது.

அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள பின்னணியில் முதற்கட்டமாக காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்தி முடித்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கடந்த ஆண்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு 21 நாட்களுக்கு முன்னர் பல்வேறு காரணிகளினால் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படாமல் பிற்போடப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

வேட்புமனுக்கள் தொடர்பில் ஆணைக்குழுவினால் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது .சட்டவாக்கத்துறையால் இயற்றப்பட்ட தீர்மானத்தையே ஆணைக்குழு செயற்படுத்துகிறது.

ஆகவே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து பாராளுமன்றமே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்

இன்று இதுவரை 468 பேர் தொற்றாளர்களாக அடையாளம் [UPDATE]

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு : மே 07 ஆம் திகதி வரை ஒத்திப்பு