அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் மர்ஜான் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டினை உடைத்து 13 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் கடந்த (27) திகதி சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முறைப்பாடுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் காணப்படும் வீடு மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராவை சோதனை செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்போது நேற்று (01) சனிக்கிழமை மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தின் ஒரு தொகையினையும், திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், வீடு உடைப்பதற்கு பயன்படுத்த உபகரணங்கள் என்பன சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவினர் மீட்டதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர் எ.ம். நிரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்