இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் ரத்நாயகாவுக்கும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கும் இடையில் சூடான விவாதம் நடைபெற்றது. அதில் ரவுப் ஹக்கீம் SJB யின் ஆதரவினாலேயே வெற்றி பெற்றதாகவும், முஸ்லிம் காங்கிரஸ் இனவாதக் கட்சி என்றும், நாங்கள் ஒருபோதும் மகிந்தராஜபக்சவின் தயவில் அரசியல் செய்யவில்லையென்றும் விமல் ரத்நாயக தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் SJB யின் வாக்கினால் வெற்றி பெற்றிருந்தால், SJB கட்சியை சேர்ந்த பிரபலமான தலைவர்கள் எல்லாம் ஏன் தோல்வியடைந்தனர் ?
முஸ்லிம் காங்கிஸ் இனவாதக் கட்சியென்றால் அனுரகுமார திசாநாயக்காவும், விஜித ஹேரத்தும் சேர்ந்து முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுக்காக ஏன் ரவுப் ஹக்கீமின் இல்லத்துக்கு சென்றார்கள் ?
வரலாற்றை திருத்திக் கூற முற்படும் விமல் ரத்னாயக்கா அவர்கள், முஸ்லிம் காங்கிரசின் முயற்சியினால் 12.5 வீத வெட்டுப்புள்ளியை 5 வீதமாக குறைக்காமல் இருந்திருந்தால் JVP என்றொரு கட்சி இல்லை என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பொதுத் தேர்தலில் JVP போட்டியிட்டு அதிக ஆசனத்தை பெற்றதுடன், அமைச்சரவையில் இடம்பிடித்தனர்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா தனது சகோதரர் அனுர பண்டாரநாயக்கவை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியினை மேற்கொண்டபோது அதனை தடுத்து நிறுத்தியதுடன், JVP யினர் மஹிந்த ராஜபக்சவுக்கு பக்கபலமாக இருந்து மகிந்தவின் வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து ஜே.வி.பி அமைச்சர் பதவிகளை வகித்ததன் பின்பு அதன் சில உறுப்பினர்கள் “மாக்சிஸ” கொள்கையிலிருந்து விலகி மகிந்த ராஜபக்சவின் அரசியல் எண்ணங்களை நிறைவேற்றும் எடுபிடியாக செயற்பட்டதுடன், சில உறுப்பினர்கள் இனவாதக் கருத்துக்களை முன்வைத்தனர்.
ஆரம்பத்தில் மகிந்தவிடம் JVP க்கு செல்வாக்கு இருந்தது. நாட்கள் செல்லச் செல்ல மகிந்தவின் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியபின்பு JVP யினர் புறக்கணிக்கப்பட்டதுடன், JVP யை உடைக்கும் சூழ்ச்சியில் மஹிந்த தரப்பு ஈடுபட்டதன் காரணமாகவும், அன்று விவசாய அமைச்சராக இருந்த இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவுக்கு தனது அமைச்சு மட்டத்தில் எந்தவித அதிகாரமும் இருக்கவில்லை.
அரசுக்குள் JVP புறக்கணிக்கப்பட்டதன் காரணமாகவே அவர்கள் மகிந்தவை விட்டு பிரிந்தனர். அவ்வாறு முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தால் JVP யினர் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சவுக்கு ஆரவு வழங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
விடையம் இவ்வாறு இருக்கும்போது தாங்கள் மகிந்தவுக்கு ஆதரவு வளங்கவில்லையென்று பாராளுமன்றில் கூறியதானது முழுப் பூசணிக்காயை மறைக்க முற்படும் ஏமாற்று அரசியல் என்பதில் சந்தேகமில்லை.
-முகம்மத் இக்பால் சாய்ந்தமருது