உள்நாடுவணிகம்

விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்த பெண்களை உள்வாங்குவது முக்கியம்

(UTV | கொழும்பு) – உலகளாவிய ரீதியில் விவசாயிகளின் தோற்றப்பாடு கடந்த 30 வருட காலத்தில் பெருமளவில் மாற்றமடைந்துள்ளதுடன், கிராமிய மக்கள் தொகையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

குறிப்பாக பாலின உள்ளடக்கம் மற்றும் தலைமுறை இயக்காற்றல் வளர்ச்சி போன்றன பதிவாகியுள்ளது.  இலங்கையிலும் வீடுகளில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஆனாலும் உற்பத்தி மூலங்கள், மூலதனம் மற்றும் தமது திறன்களையும் அறிவையும் பிரயோகிப்பது போன்றவற்றில் குறைந்த வாய்ப்புகளை அவர்கள் கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் இயங்கும் விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டம் (TAMAP), உலக உணவு ஸ்தாபனம் (FAO) மற்றும் பெண்கள் ஆய்வு நிலையம் (CENWOR) ஆகியன இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ”பாலின உள்வாங்குதலினூடாக விவசாய உற்பத்தித் திறனுக்கு உதவிகளை வழங்கல்” எனும் தலைப்பில் மாநாடு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தன.  இந்த நிகழ்வின் போது பங்குபற்றுநர்களுக்கு விவசாயத்துறையின் அபிவிருத்தியில் பங்களிப்பு வழங்கும் பெண்களை கௌரவிப்பதற்கான அவசியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தன.

முக்கியமாக, இந்த நிகழ்வில் எய்தப்பட்ட தீர்மானங்களைப் பயன்படுத்தி விவசாய அமைச்சு மற்றும் TAMAP ஆகியன இணைந்து முன்னெடுக்கும் புதிய பரந்த விவசாயக் கொள்கை கட்டமைப்பில் உள்வாங்குவதற்கும் திட்டமிட்டுள்ளன.

”கிராமிய இலங்கை, பாலின சமத்துவத்தை செயற்படுத்தும் அங்கம்” (Rural Sri Lanka, an Enabling Context for Gender Equality) எனும் தலைப்பில் உலக உணவு ஸ்தாபனத்தின் (FAO) அசும்தா ஜயரட்னம் வழங்கிய விளக்கத்தின் போது, இலங்கையின் நான்கு மில்லியன் கிராமிய குடும்பங்களில் சுமார் 19-23%ஆனவை பெண்களை குடும்பத் தலைமையாக கொண்டமைந்துள்ளன, பண்ணைச் செயற்பாடுகளில் ஈடுபடும் குடும்ப அங்கத்தவர்களில் கொடுப்பனவை பெறாத குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை 78.9% ஆக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

”பெண்கள் மிகவும் பாரம்பரியமான செயற்பாடுகளுக்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலை பற்றி நாம் பேசுகின்றோம். குறிப்பாக ஆண்கள் பாதுகாவலர் நிலையை வகிப்பது அல்லது பெண்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்குவது என்பது பற்றி கவனம் செலுத்தியிருந்தோம்.” என ஜயரட்னம் தெரிவித்தார்.

பாலின இடைவெளியை பூர்த்தி செய்வதற்கு, பெண்களின் பிரயோக தேவைகளையும் மற்றும் தற்போதைய நெருக்கடிகளையும் கவனத்தில் கொண்ட தற்போதைய சூழலை மாற்றியமைக்க வேண்டிய முக்கியத்துவம், அதனூடாக நேர்த்தியான மாற்றங்களை ஏற்படுத்த தூண்டுவது மற்றும் நிலைபேறான உணவு கட்டமைப்பு மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்த விவசாயத் துறைக்கு பெண்களை ஈடுபடுத்துவது தொடர்பில் இந்த ஆய்வின் போது வெளிக் கொணரப்பட்டிருந்தது.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”வீட்டுப் பராமரிப்பு செயற்பாடுகளில் பெண்கள் அதிகளவு கவனம் செலுத்துகின்மையால் பணமீட்டக்கூடிய சந்தை வாய்ப்புகளிலிருந்து பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர். அளவுக்கதிமான பணிச் சுமை காரணமாக, உற்பத்தித்திறனை பொறுத்தமட்டில், அவர்களுக்கு கவனம் செலுத்த போதியளவு நேரமில்லை. பராமரிப்பு மற்றும் வீட்டுப் பணிகள் சமனற்ற வகையில் பகிரப்பட்டுள்ளமையால், அவர்களுக்கு வீட்டுப் பணிகளை கவனிக்க அதிகளவு காலம் தேவைப்படுவதுடன், குறைந்த திறன், குறைந்த கொடுப்பனவுடனான தொடர்பில் பெண்களின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.” என்றார்.

விவசாயத்துறையில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ள நிலையில், பெண்களுக்கும் உயர்மட்ட இயந்திரங்களை பயன்படுத்தும் முறை தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். மேலும், மட்டுப்படுத்தப்பட்ட காணி உரிமை மற்றும் கட்டுப்படுத்தும் வளங்களை அணுகுவதில் காணப்படும் கட்டுப்பாடு போன்றன காரணமாகவும் பெண்களின் ஈடுபாடு குறைவாக காணப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜயரட்னம் தெரிவிக்கையில், ”காணி உரிமையாண்மை தொடர்பில் காணப்படும் விதிமுறைகள் மற்றும் சட்டபூர்வ தன்மை போன்றன ஒரு குறித்த பாலினத்தை சார்ந்ததாகவும், அது ஆண்களுக்கு அதிகம் சாதகமாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களின் பங்கு 37% ஆக அமைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இதில் பல பெண்களின் பணி பதிவு செய்யப்படவில்லை அல்லது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ”விவசாயத் துறையை பொறுத்தமட்டில் பாலினம் என்பது ஒரு பிரச்சினை என்பதை நாம் அனைவரும் அறிவோம். சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிரயோக ரீதியான தீர்வுகளை நாம் முன்வைக்க வேண்டும்.” என அவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

பெண்கள் ஆய்வு நிலையத்தின் (CENWOR) பணிப்பாளர் கலாநிதி. கலா பீரிஸ் கருத்தின் பிரகாரம், குறித்த அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ”பாலின சமத்துவமான விவசாய கொள்கைகள்” எனும் ஆய்வில், பெண்கள் மற்றும் ஆண்கள் இணைந்து விவசாய உற்பத்தித்திறனை ஊக்குவிப்பது மற்றும் கிராமிய மட்டத்தில் மலர்ச்சியை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்திருந்தது.

விவசாயத்துறையில் ஆண்கள் மற்றும் பெண்களின் ஈடுபாடு, ஆண்கள் மற்றும் பெண்கள் வெவ்வேறு நிலைகளில் ஈடுபடுவதனூடாக விவசாய உற்பத்தித் திறனில் பாலினத் தாக்கம் மற்றும் கிராமிய கட்டியெழுப்பலில் விவசாயத்துறையில் பாலினசார் உறவுகளின் தாக்கம் போன்ற மூன்று பரந்த பிரிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தன.

நிஜ நிகழ்வுகள் மற்றும் உள்ளார்ந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக விவசாய கொள்கைகளில் பாலின (GAPo) சாதனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனூடாக பாலின இடைவெளிகள் பரிசோதிக்கப்பட்டதுடன், அவசியமான கொள்கை தீர்வுகளை இனங்காண முடிந்திருந்தது.

தேசிய விவசாய மற்றும் இயற்கை வள கொள்கைகளில் பிரிவுசார் கொள்கைகளில் பாலினசார் பாகுபாடின்மை உள்வாங்கப்படவில்லை என்பது இனங்காணப்பட்டிருந்தது.

கலாநிதி. பீரிஸ் குறிப்பிடுகையில், ”கொள்கைகளில் பாலினம் தொடர்பான எவ்விதமான அங்கங்களும் இல்லை. எவ்வாறாயினும், சமூக மற்றும் கள மட்டத்தில் சில மூலோபாயங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், சமூக அடிப்படையிலான அமைப்புகள் முகாமைத்துவ தீர்மானங்கள் மேற்கொள்ளும் மட்டங்களில் பெண்களின் பிரதித்துவம் பற்றி இவை குறிப்பிடுகின்றன.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”குறிப்பாக துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை பற்றி பேசும் போது, கொள்கையில் பாலின சார் அக்கறைகளை ஒன்றிணைப்பது தொடர்பில் கட்டமைக்கப்பட்ட வழிமுறை முக்கியமானதாகும், கொள்கைகளை மீளமைக்கும் போது அல்லது புதிய கொள்கைகளை அறிமுகம் செய்யும் போது குறித்த துறைகளில் பெண்களின் பிரயோக மற்றும் மூலோபாய தேவைகளை உள்வாங்குவது மிகவும் முக்கியமானதாகும்.” என்றார்.

தலைமைத்துவம், திறன் மற்றம் தொழில்நுட்ப மாற்றம் ஆகியன விவசாயத்துறையிலுள்ள பெண்களுக்கு வலுவூட்டுவதாக அமைந்திருக்கும் என்பதுடன், இவை கொள்கைகளில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ”2018 விவசாயத் துறை வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பாலின ஏற்புத்தன்மை” ஆய்வினூடாக பெறப்பட்ட தரவுகளும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்திருந்தது. விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் வரவு செலவுத் திட்டங்கள் இதன் போது கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

இந்த தரவுகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசகரும் பாலின நிபுணருமான ஸ்ரீயானி பெரேரா வெளியிட்டு குறிப்பிடுகையில், ”விவசாயத்துறை என்பது மிகவும் சிக்கல்கள் நிறைந்தது, இதில் பல உப துறைகள் மற்றும் நிறுவனங்கள் காணப்படுகின்றன” என்றார்.

விவசாயத்துறை திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு திட்டமிடல் தொடர்பில் தற்போது காணப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பாலின ஏற்புத்தன்மையை புரிந்து கொள்வது மற்றும் வருமானம், வாழ்க்கைத் தரம் மற்றும் பெண்கள் மற்றும் ஆண்களால் வளங்களை அணுகல் போன்றவற்றில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதாக இந்த ஆய்வு அமைந்திருந்ததுடன், குறித்த திணைக்களங்களினால் குறித்த வரவு செலவுத் திட்டங்களை வகுக்கும் போது பயன்படுத்தப்படும் முறை மற்றும் சாதனங்கள் கண்டறிதல், வினைத்திறன் அறிக்கைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட அலகு தலைவர்களுடனான கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானம் மேற்கொள்வோருடனான பிரதான நேர்காணல்கள் போன்றனவும் அடங்கியிருந்தன.

”பெண்களுக்கு அணுகுவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன அத்துடன் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுகின்றன. நாட்டில் பெண்களை விவசாயிகளாக ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. இனங்காணப்பட்டிருந்த பாரிய பாலின இடைவெளிகளாக இவை அமைந்துள்ளன.” என பெரேரா குறிப்பிட்டார்.

பெண்களை ஊக்குவிப்பது மற்றும் மூலோபாயத்துக்குட்படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியாக சிந்திக்க வேண்டும். முறையாக திட்டமிட்டால், புதிய மூலோபாயங்கள் பற்றி சிந்திக்க முடியும் என்பதுடன், தனிநபர்களாக மட்டுமன்றி, பெண்களின் ஈடுபாட்டை மேம்படுத்தக்கூடிய புதிய மூலோபாயங்கள் பற்றி உங்களால் சிந்திக்கக்கூடியதாக இருக்கும்.” என குறிப்பிட்டார்.

மூன்று நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு பெரேரா குறிப்பிடுகையில், ”இந்த மூன்று நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால், உயர்ந்த நிலைக்கு செல்லச் செல்ல, சம்பளம், சலுகைகள், சுற்றுப் பயணங்கள், வலிமை, போன்றவற்றில் ஆண்கள் முன்னிலையில் திகழ்கின்றனர்.” என்றார்.

Related posts

வெட்டுக்கிளிகளின் பரவல் – விவசாயிகளிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

பெசில் ராஜபக்ஷ தலைமையில் பெரமுனவின் கட்சிக் கூட்டம் ஆரம்பம்

எகிறும் கொரோனா : ஒட்சிசன் தொகையை இறக்குமதி செய்ய நடவடிக்கை