உள்நாடு

விவசாய அபிவிருத்திக்காக 3 இராஜாங்க அமைச்சுக்கள்

(UTV | கொழும்பு) –

• கொள்கைகளை தயார் செய்வது அமைச்சர் செயற்படுத்துவது இராஜாங்க அமைச்சர்.

• தற்கால அரசியல் கலாசாரத்தை மாற்றுவேன்.

• திட்டங்கள், ஆவணங்களில் இருந்து பயன் இல்லை. கீழ் மட்டத்தில் செயற்படுத்த வேண்டும்.

´இலகுவாக ஆரம்பிப்பதன் மூலம் காலம் செல்லும்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால் இலகுவான இடத்தில் இருந்து ஆரம்பிக்கவும். 2005ல் நாம் பதவிக்கு வரும்போது வெளியில் நடமாட முடியாது, எல்லா இடங்களிலும் குப்பைகள் நிறைந்து காணப்பட்டன. அன்று எனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து 100 யார்களுக்குள் மூன்று குப்பை குவியல்கள் இருந்தன. குப்பைகளை அகற்றுவது மிக இலகுவான விடயம். அனைத்து அமைச்சுக்களுக்கும் இலகுவான வேலைகளிலிருந்து நீண்ட பயணம் ஒன்றை செல்ல முடியும்´ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இராஜாங்க அமைச்சர்களின் முன் தெரிவித்தார்.

அனைத்து இராஜாங்க அமைச்சர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையை இன்னும் மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய முடியுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி இராஜாங்க அமைச்சுக்களின் கட்டமைப்பு பல வருடங்களாக இனங்காணப்பட்டு வந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

´உங்களுக்கு தெளிவாகி இருக்கும் இந்த அமைச்சுக்களின் மூலம் எவ்வளவு வேலைகளை செய்ய முடியுமென்று. பொதுவான கொள்கையின் அடிப்படையில் அமைச்சர்களுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது எமது கடமையாகும் அதிகாரிகளை ஒன்றிணைத்து உங்களது கடமைகளை நிறைவுவேற்றுமாறு ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.

செயற்திட்டம் ஒன்றுடன் எதிர்கால வேலைகளை செய்ய வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி ஒவ்வொரு வருடமும் நிறைவேற்ற முடியுமான அளவை கணித்து 5 வருடங்களுக்கான திட்டத்தை தயாரிக்குமாறும் குறிப்பிட்டார்.

´சரி சேர், அனைத்தும் சரி என்று அதிகாரிகள் கூறலாம். அத்திட்டங்கள் ஆவணங்களிலேயே இருக்கும் திட்டங்கள். ஆவணங்களில் இருந்து பயன் இல்லை. அவற்றை செயற்படுத்த வேண்டும். அதுதான் இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு.

மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாக ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றுவதாகவும் உறுதியளித்தார். ´அப்பொறுப்பு எனக்கும் உங்களுக்கும் உள்ளது, அத்துடன் உங்களது அரசியல் வாழ்க்கையை ஒழுங்கமைத்துக் கொள்ளவும் இது ஒரு சந்தர்ப்பமாகும்´ என்று கூறினார்.

ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர்கள் முன் உரையாற்றுகையில் கல்வி, விவசாயம், தொழிநுட்ப புத்தாக்கம், வீட்டு வசதிகள், நீர் வழங்கல் , நகர அபிவிருத்தி, வாழ்க்கை செலவு போன்ற பல துறைகள் பற்றி தமது கருத்தை தெரிவித்தார். உதாரணமாக கைவிடப்பட்டுள்ள வயல் நிலங்களில் மீண்டும் பயிரிடுதல் தொடர்பாக குறிப்பிட்ட ஜனாதிபதி, விவசாய அபிவிருத்திக்காக மூன்று இராஜாங்க அமைச்சுக்களை ஸ்தாபித்ததாகவும் குறிப்பிட்டார்.

´சில வயல்கள் கைவிடப்பட்டுள்ளன. அவற்றில் நெல்லை பயிரிட முடியாது. விவசாய சேவை மத்திய நிலையங்களுக்கு கைவிடப்பட்ட வயல் நிலங்களில் வேறு பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதற்காக நாம் அனுமதியளித்தோம். அதன் பிரகாரம் தென்னை பயிரிடவும் முடியும்.´ என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மாதத்திற்கு ஒரு முறையாவது இராஜாங்க அமைச்சர்களை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்காலங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவும் அதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Related posts

கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், முஸ்லிம் மீடியா போரம் நடாத்திய ஊடகச் செயலமர்வு!

மினுவாங்கொட – மொத்தமாக 1,034 பேருக்கு கொரோனா

‘தாங்க முடியாத கடன் சுமைகளை கொண்ட நாடுகளில் இலங்கையும்’