வகைப்படுத்தப்படாத

வித்தியா படுகொலை வழக்கு..! 41 குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!

(UDHAYAM, COLOMBO) – புங்குடுதீவு மாணவி  வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபா்களுக்கும் எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபா் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் இன்று பாரப்படுத்தப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாய முறையில் இன்று யாழ் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்ற முதலாவது விசாரணையில் வழக்கின் பிரதான ஒன்பது சந்தேக நபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்

சந்தேகநபர்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் முன்னிலையாகியதுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அரச செலவில் ஒன்பது சந்தேக நபர்களுக்குமான பொதுவான ஒரு சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டிருந்தார்.

வழக்கு தொடுனர்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணி எஸ்.குமாரரத்தினம் எதிரிகள் மேலான 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரம் வழக்கின் 37 சாட்சிகளின் வாக்குமூல அறிக்கை மற்றும் சான்றுப்பொருட்களின் அறிக்கைகளை சமர்ப்பித்தார்.

கடத்தியமை,வன்புனர்வுக்கு உட்படுத்தியமை, கொலை செய்தமை மற்றும் மேற்படி குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய பிரதான குற்றங்கள் அடங்கிய 41 குற்றச்சாட்டுக்களும் மன்றில் எதிரிகளுக்கு வாசிக்கப்பட்டதுடன் சகல குற்றச்சாட்டுக்களையும் ஒன்பது எதிரிகளும் மறுப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர் வழக்காக இம்மாதம் 28ம் 29ம் 30ம் மற்றும் அடுத்த மாதம் 03ம் 04ம் 05ம் திகதிகளில் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் தீர்மானித்ததுடன், வழக்கின் 37 சாட்சிகளும் குறித்த நாட்களில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

நர்ஸ் செய்து வந்த காரியம்

Anglican Church Head to visit Sri Lanka

கடும் மின்னல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!