மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தின ஸ்பெஷலாக இன்று (26) வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதுதான் தன்னுடைய கடைசி படம் என விஜய் அறிவித்திருப்பதால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன், நரேன், பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கின்றனர்.
ஒவ்வொருவரின் போஸ்டரையும் தனித்தனியாக வெளியிட்டு படக்குழு இணையத்தை அலற விட்டிருந்தனர்.
டைட்டில் வெளியானது இந்நிலையில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குடியரசு தின ஸ்பெஷலாக இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த படத்திற்கு “ஜன நாயகன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேன் மீது விஜய் நின்று தன் பின்னர் இருக்கும் ஆதரவாளர்களுடன் செல்ஃபி எடுக்கும் விதமாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.
மாஸ்டர் படப்பிடிப்பு சமயத்தில் விஜய் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தி இருந்தனர். அப்போது மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு ஆயிரக்கணக்கான இரசிகர்கள் வந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து தன் கேரவன் மேல் ஏறி விஜய் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் அப்போது பெரிய அளவில் வைரல் ஆனது. அந்த புகைப்படத்தை இன்ஸ்பிரேஷனாக வைத்து தற்போது அதே பாணியில் “ஜன நாயகன்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அரசியல் மற்றும் ஆக்ஷன்: தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என கூறப்படுகிறது.
ஆனால், ரீமேக்காக அல்லாமல் அந்த படத்தின் கதையுடன் சில காட்சிகள் பொருந்தி போவதால் அதன் ரீமேக் உரிமையை படக்குழு வாங்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தன்னுடைய எல்லா படங்களிலும் ஏதோ ஒரு அரசியல் பார்வையை முன் வைக்கும் இயக்குனர் வினோத், இந்த படத்திலும் தீவிர அரசியலை பேச இருக்கிறார்.
அதே சமயம் தீரன் அதிகாரம் ஒன்று பாணியில் ஆக்ஷன் கலந்த ஜனரஞ்சகமான ஒரு படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
தீபாவளி ரிலீஸ்?: இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 ஒக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், தீபாவளி வெளியீடாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அரசியல் தலைவராக உருவெடுத்துள்ள விஜய் அடுத்தாண்டு தேர்தலை சந்திக்கவுள்ளார். அதற்கு முன்னதாக வெளிவரும் திரைப்படம் என்பதால் இது ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.