வகைப்படுத்தப்படாத

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|PUTTALAM)-அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

புத்தளம் நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை (02) புத்தளம், வெட்டுக்குளச் சந்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்ஸி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட பெருந்திரளான மக்களும் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

என்மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே, நான் சார்ந்த அகதிச் சமூகத்தை “வந்தான் வரத்தான், பிச்சைக்காரர்கள், சொப்பிங் பேக்குடன் வந்தவர்கள்“ எனவும் நாகரீகமில்லாமல், புத்தளத்து அரசியல்வாதிகள் ஒருசிலர் வாக்குகளுக்காகத் தேர்தல் மேடைகளில் கூறி வருகின்றனர்.

புலிகளால் விரட்டப்பட்டு, உடுத்த உடையோடு புத்தளத்துக்கு வந்து, கால்நூற்றாண்டுக்கு மேலாக இந்த மண்ணிலே உங்களோடு ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும் வாழும் எம்மை, இவ்வாறான அரசியல்வாதிகள் கேவலமாக விமர்சிக்கின்றனர். இழந்துபோன தங்களது அதிகாரத்தை மீண்டும் எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று, இவர்கள் குத்துக்கரணம் போடுகின்றனர். எனினும், எமது சகோதரர்களான புத்தளத்து மக்கள் அன்பானவர்கள், பண்பானவர்கள், எதற்கும் விலை போகாதவர்கள், எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் எம்முடன் இன்னுமே ஒட்டிஉறவாடியே வருகின்றனர். இந்த நிலையில், அந்த மக்களின் மனங்களிலே நச்சு விதைகளை இந்த அரசியல்வாதிகள் விதைத்து வருகின்றனர்.

புத்தளம் மண்ணையும், மக்களையும் வடக்கு முஸ்லிம்கள் ஒருபோதுமே மறக்கவில்லை, மறக்கவும்மாட்டார்கள். அதுமட்டுமின்றி இரண்டு சாராரும் இரண்டறக் கலந்து, ஒட்டி உறவாடி வாழ்கின்ற இந்த அன்புப் பிணைப்பை உடைத்தெறிவதன் மூலமே, தமக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என்று ஒருசில மரக்கட்சி அரசியல்வாதிகள் அலைந்து திரிகின்றனர்.

இந்த மண்ணை ஆள வேண்டும் என்ற நோக்கம் வடக்கு முஸ்லிம்களுக்கும் இல்லை, அவர்களின் பிரதிநிதியான எனக்கும் இல்லை. என் உயிருள்ள வரை இந்த மாவட்டத்தில் எந்தத் தேர்தலிலும் நான் போட்டியிடப் போவதுமில்லை. அதற்கான தேவையும் இல்லை. அவ்வாறான ஆசையும் எனக்குக் கிடையாது. எனவே, எவரும் வீணாக அச்சம்கொள்ள வேண்டாம்.

வன்னி மக்கள் எனக்கு அளித்த வாக்குகளினால் கிடைத்த அதிகாரங்களைக் கொண்டு, நான் வன்னிக்கு மட்டுமல்ல, புத்தளம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பணியாற்றி வருகின்றேன். புலிகளால் துரத்தப்பட்டு அகதியாகி, எம்.பியான நான் பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விரட்டப்பட்ட போது, இறைவனிடம் பிரார்த்தித்தேன். இறைவன் எம்மைக் கைவிடவில்லை. அதிகாரங்கள் கிடைத்தன. அதன்மூலம் வேரொடும், வேரடி மண்ணோடும் துரத்தப்பட்ட அகதிச் சமூகத்தின் அவல நிலையைப் போக்க என்னால் ஓரளவு முடிந்தது.

அதேபோன்று, புத்தளத்துக்கும் நாங்கள் பணியாற்ற விழைந்த போது, கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் அதிகாரங்களைச் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள் அதனைத் தடுத்தனர். பல்வேறு முட்டுக்கட்டைகளைப் போட்டனர். எம்மைப் பற்றி இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி, அகதி மக்களை நாங்கள் இந்தப் பிரதேசத்தில் நிரந்தரமாகத் தங்க வைக்கப் போகின்றோமென்று, பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டனர். ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டோம்.

இங்கு வாழும் வடக்கு முஸ்லிம்களை மீண்டும் அவர்களது தாயகத்தில் குடியேற்ற வேண்டும் என்பதில் நான் முனைப்பாகவும், உறுதியாகவும் இருக்கின்றேன். அதற்கான பிரயத்தனங்களில் நான் ஈடுபடும் போதுதான், என்னை இனவாதிகள் மோசமாகத் திட்டுகின்றனர். தொடர்ச்சியான பல்வேறு வழக்குகளை எனக்கெதிராகத் தொடுத்துள்ளனர். இனவாதிகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தீனிபோட்டு வருகின்றனர். மு.கா தலைமை மேடைகளிலே என்னை விமர்சிப்பதையே குறிக்கோளாகவும், தொழிலாகவும் செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.

புத்தளத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், தனது தலைவனுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல என்ற பாங்கில், என்னைப் பற்றிய அபாண்டங்களைப் பரப்பி வருகின்றார். என்மீது கொண்ட தனிப்பட்ட காழ்ப்புணர்வினால், வடக்கு முஸ்லிம்கள் அனைவரையும் மலினப்படுத்துவதோடு, அவர்களை மனக்கவலை கொள்ள வைக்கின்றார். சமூக வலைத்தளங்களின் மூலம் இவர்கள், கூலிக்கு ஆளமர்த்தி இரவு பகலாக எம்மை தூசித்து வருகின்றனர்.

என்னதான் இவர்கள் செய்தாலும், நாளுக்குநாள் எமது கட்சியின் செல்வாக்கும், மவுசும் அதிகரித்து வருகின்றது. மு.கா வினர் இழந்து போய்கொண்டிருக்கும் தமது செல்வாக்கை சரி செய்வதற்காக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, மக்களைப் போலியான வழிக்கு இட்டுச் செல்கின்றனர். இந்த விடயங்களில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

புத்தளத்து மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவே, நாங்கள் எமது கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியலை இந்த மண்ணுக்கு வழங்கி, உங்களை கௌரவித்தோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/M-1-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/M-2-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/02/M-3-1.jpg”]

 

-சுஐப் எம்.காசிம் –

 

 

Related posts

புதிய களனி பாலத்தை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு !

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குளவி கொட்டியதில் 7 பேர் வைத்தியசாலையில்