விளையாட்டு

வயதாகிவிட்டது புலனாகிறது

(UTV |  மும்பை) – சென்னை அணிக்காக 200 ஆட்டங்களில் ஆடியது, தனக்கு வயதாகிவிட்டது என்பதை உணர்த்துவதாக டோனி கூறியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பந்தாடியது. இதில் முதலில் துடுப்பாடிய செய்த பஞ்சாப், தீபக் சாஹரின் அபார பந்துவீச்சுக்கு (4 விக்கெட்) ஈடுகொடுக்க முடியாமல் 106 ரன்களில் சுருண்டது. இந்த எளிய இலக்கை சென்னை அணி 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி ஆடிய 200-வது ஆட்டம் இதுவாகும். அதாவது ஐ.பி.எல்.-ல் 176 ஆட்டம், சாம்பியன்ஸ் லீக்கில் 24 ஆட்டம் என்று மொத்தம் 200 ஆட்டங்களில் சென்னை அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று 39 வயதான டோனியிடம் கேட்ட போது, ‘மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்’ என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

மேலும் டோனி, ‘இது ஒரு நீண்ட பயணம். வித்தியாசமான சூழல், வெவ்வேறு நாடுகள் என்று மிகவும் சுவாரஸ்யமான ஒரு பயணம். கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து எனது ஐ.பி.எல். பயணம் தொடங்கியது. அதன் பிறகு தென்ஆப்பிரிக்கா, துபாயில் எல்லாம் விளையாடி விட்டு மீண்டும் தற்போது சொந்த நாட்டில் விளையாடுகிறேன். ஆனால் எங்களுக்கு மும்பை, சொந்த ஊர் மைதானமாக அமையும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை.

சென்னை சேப்பாக்கத்தை எடுத்துக் கொண்டால் 2011-ம் ஆண்டு வரை எங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆடுகளமாக அது இருந்தது. அப்போது சுழலுக்கு ஒத்துழைக்கும். வேகப்பந்து வீச்சுக்கும் உதவிகரமாக இருக்கும். ஆனால் ஆடுகளத்தை மறுசீரமைப்பு செய்த பிறகு அதன் தன்மை மாறி விட்டது. அதன் பிறகு அங்குள்ள சூழலுக்கு தக்கபடி மாற்றிக்கொள்வது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

அதே சமயம் தற்போதைய மும்பை வான்கடே ஆடுகளத்தை எடுத்துக் கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எல்லாமே போட்டிக்குரிய தினத்தில் சீதோஷ்ண நிலையை பொறுத்தது. இன்றைய ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் பந்தின் நகர்வு தன்மை நன்றாக இருந்தது. ஆனால் அதிக அளவில் ‘ஸ்விங்’ ஆகவில்லை. பனிப்பொழிவு இல்லாததால் பந்து வீச்சு எடுபட்டது’ என்றார்.

Related posts

உலகை வென்று இன்று பத்து ஆண்டுகள்

2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – கிரிக்கெட் வரலாற்றில் ஓர் திருப்பம்

ரசிகர்களுக்கு அனுமதியில்லை