(UTV | கொழும்பு) – எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு, IPL போட்டிகளில் விளையாடும் 4 அணிகள் அழைப்பு விடுக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் நடைபெற்ற IPL போட்டிகள் கொவிட் பரவல் காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த போட்டிகளின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம் திகதி முதல் ஒக்டோபர் 15ம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், IPL போட்டிகளில் விளையாடும் இரண்டு அணிகள், வனிந்து ஹசரங்கவை, மேலதிக வீரராக இணைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இலங்கை அதிகாரிகள் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில், தான் IPL போட்டிகளில் கலந்துக்கொள்வதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தரப்படுத்தலுக்கு அமைய, இருபதுக்கு இருபது போட்டிகளில் பந்து வீச்சாளர் மத்தியில் வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
மேலும் இந்திய அணியுடன் நடந்து முடிந்த இருபதுக்கு இருபது போட்டியில் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தெரிவாகியுள்ள நிலையிலேயே, தரப்படுத்தலில் அவர் முன்னோக்கி நகர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2021/02/utv-news-alert-2.png)