அரசியல்உள்நாடு

வத்திக்கான் பிரதிநிதி, ஜனாதிபதி அநுர சந்திப்பு

இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி வணக்கத்திற்குரிய பிரையன் உதைக்வே ஆண்டகை (Rev. Dr.Brian Udaigwe) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர குமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி,கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் இறைமைமிக்க வத்திக்கான் அரசின் பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்களின் உளப்பூர்வமான வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதிக்கு கையளித்தார்.

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை வெற்றிமிக்க மற்றும் சுபீட்சத்தை நோக்கிப் பயணிக்கும் எனத் தெரிவித்த வத்திக்கான் பிரதிநிதி உதைக்வே ஆண்டகை, அதற்காக தாம் மனமார வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் எதிர்காலம் குறித்து தனது சாதகமான கருத்தை வெளிப்படுத்திய உதைக்வே ஆண்டகை, மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஏற்கனவே சிறப்பான அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அது தொடர்பான ஜனாதிபதியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், அந்த முயற்சிகள் அனைத்திற்கும் வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொண்ட மிகவும் மோசமான அனுபவமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்த உதைக்வே ஆண்டகை, அது தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முயற்சியையும் பாராட்டினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதற்காக ஜனாதிபதியின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு வத்திக்கானின் முழு ஆதரவையும் வழங்குவதாக உதைக்வே ஆண்டகை உறுதியளித்தார்.

இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை நாடு மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியும் வத்திக்கான் பிரதிநிதி உடன்பாடு தெரிவித்தனர்

Related posts

நாரம்மல துப்பாக்கிச்சூடு – நியமிக்கப்பட்ட விசேட குழு

“திருமண சட்ட விவகாரம் : வெளிநாட்டவர்களைத் திருப்திப்படுத்த முயற்சிக்கும் முஷாரப் எம்பி ” உலமா கட்சி

வில்பத்துவை அழிக்கச்சென்ற பவித்ராவுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தடை