சூடான செய்திகள் 1

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த திட்டங்கள் !-அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO) கிட்டத்தட்ட 10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான பங்களிப்பை இந்த மாகாணம் நல்குவதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 2000 புதிய ஏற்று மதியாளர்களை உருவாக்கும் செயற்திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (01) இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் சர்வதேச வர்த்தக, மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி சிறிஸ் கந்தராஜா, அரசாங்க அதிபர் ஹனீபா ,ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவி இந்திரா மல்வத்த, மாகாண செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு, அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மத் , பாரி ,பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

வடமாகாண உற்பத்தியாளர்களை நாளைய ஏற்றுமதியாளர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வவுனியா மாவட்டத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நமது பிரதேசத்தில் பல சவால்களுக்கு முகம் கொடுத்து குறுகிய காலத்திற்குள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

யுத்தத்தினால் இந்த மாகாணம் மிக மோசமான அழிவுகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். நமது இளைஞர், யுவதிகள் படித்துவிட்டு தொழிலின்றி அவதியுறுகின்றனர். வன்னி மாவட்டத்தில் திறன் உள்ளவர்களும் ஆற்றல் படைத்தவர்களும் இருக்கின்றனர். வளங்களும், மனித வலுவும் நிரம்பிக்காணப்படுகின்ற இந்த மாவட்டத்தில் நமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் இந்த மாவட்டத்தின் பொருளாதார வளத்தை பெருக்க வேண்டும். வெறுமனே உற்பத்தியாளர்களாக மட்டும் நாம் இருக்காமல் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்ற பங்களிப்பை நல்கும் ஏற்றுமதியாளர்களாக நாம் மாற வேண்டும். இந்த நன்நோக்கில் தான் வன்னியிலும் இந்த ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தபடுகின்றது. அமைச்சர் மலிக் சமரவீக்ரமவும் அவரது அமைச்சின் கீழான அதிகாரிகளும் வன்னி மாவட்டத்தின் வவுனியா, முல்லைத்தீவு , மன்னாரிலுள்ள உற்பத்தியாளர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களை ஏற்றுமதியாளர்களாக ஆக்குவதற்காக இங்கு வந்த அமைச்சருக்கும் அவரது அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

அமைச்சர் மலிக்சமர விக்கிரம ஏற்றுமதி துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றார். 2020 ஆம் ஆண்டு 23 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காக கொண்டு அமைச்சர் மலிக்சமர விக்ரமவின் முன்னெடுப்புக்கள் அமைந்துள்ளன. அவர் தமது பணியை திறம்பட முன்னெடுக்கின்றார். அந்த வகையில் உங்களது எதிர் காலத்தை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த அரிய பணியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வேண்டுகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இலவச பாடகு சேவை தயார்; ஒரு மாதத்திற்கு மட்டுமே

ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நிறைவு

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி