வகைப்படுத்தப்படாத

வடக்கு கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாளையும் நாளை மறுதினமும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

காணிகளை விடுவிப்பது தொடர்பாக முல்லைத்தீவு யாழ்ப்பாணம் கிளிநொச்சி வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த செயலாளர்கள் முப்படை தலைமை அதிகாரிகள் மாவட்ட அரசியல்வாதிகள் பிரதேச மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நாளைமறுதினமும் நடைபெறவுள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ஆர். சம்பந்தன் தலைமையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் போது காணிகளை அடையாளங்கண்டு விடுவிப்பதற்கான மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாகவே மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கூட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களுடனான சந்திப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இராணுவம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டிருப்பது தொடர்பான விபரங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையிலான பேச்சுவார்த்தையின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்படுவதன் அவசியத்தையும் இதன்போது கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து ஒன்பது வருடங்களாகியும் பொதுமக்களின் காணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளனர் என்பதை கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் இராணுவம் படிப்படியாக பொதுமக்களின் காணிகளை விடுவித்துவருவதாக கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையின் போது இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.

திங்கட்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன் , இ.சரணவபவன், எஸ்.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

நெதர்லாந்து தாக்குதல் -மூவர் பலி

ரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை தர வேண்டி இருக்கும்-டிரம்ப்

புலமைச் சொத்து சட்ட செலயமர்வு