அரசியல்உள்நாடு

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு – ஜனாதிபதி அநுர

தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இன்று (08) மாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும கிடைக்காதவர்கள் மீண்டும் மேன்முறையீடு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூட வசதியில்லாத குடும்பங்கள் இருப்பின் அத்தகைய தரப்பினருக்கு அரசியல் தலையீடுகள் இன்றி குறுகிய காலத்திற்கு சில கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனவரி மாதம் புதிய பாடசாலை தவணை அமலுக்கு வருகிறது.

“டிசம்பரில் பாடசாலை தவணை முடிவடைந்தாலும், அடுத்த புதிய பாடசாலை தவணை ஜனவரி இறுதியில் தொடங்கும் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த ஆண்டு ஜனவரியில் பழைய தவணை முடிவடைகிறது. புதிய தவணை ஜனவரி இறுதியில் தொடங்குகிறது.

அந்த புதிய பாடசாலை தவணையில், மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்போது, ​​புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை சரியாக வாங்க முடியாத அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

அடுத்தப்படியாக அஸ்வெசும, அதில் உள்ள பெயர்களை மாற்ற மாட்டோம்.

அஸ்வெசும கிடைக்காதவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அரசியல் தலையீடுகள் இன்றி நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும். ஏற்கனவே இது குறித்து பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் சில சலுகைகளைப் பெற வேண்டுமாயின் விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதற்கான நியாயமான காரணங்களை முன்வைக்குமாறும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் முதலில் சட்டம், அரசியலமைப்பு மற்றும் சுற்றறிக்கையால் வழங்கப்படாத அனைத்து சட்டவிரோத விடயங்களையும் திரும்பப்பெற்றோம்.

இதை வைத்து கொண்டு பழிவாங்குகிறோம் என்கின்றனர். இது பழிவாங்குவது அல்ல சட்டத்திற்கு உட்பட்டே செய்கிறோம்.

அத்துடன் சட்டரீதியாக கொடுக்கப்பட்டுள்ளவற்றையும் திரும்பப்பெறுவதற்காக சட்டத்தை மாற்றுவதற்கான குழுவையும் தேசிய மக்கள் சக்தி அமைத்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு இல்லையென்றால், அவர்கள் அரசாங்கத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் அஸ்வெசும கிடைக்கும் மட்டத்தில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீடு தருவோம். ஆனால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இந்நாட்டு குடிமக்கள் எதையாவது வாங்க விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகள் எல்லாம் விண்ணப்பிக்காமல் எடுத்துக்கொள்கிறார்கள்…அதனால் தான் விண்ணப்பம் அனுப்பச் சொல்கிறோம்.

விண்ணப்பத்தை பரிசீலித்து கருணையுடன் ஏதாவது கொடுப்பது தவறா? இது பழிவாங்கல் அல்ல.

நமது நாட்டின் அரசியலை ஒரு தரத்திற்கு கொண்டு வருவோம்.

ஆனால், நம் நாட்டு அரசியல்வாதிகள் இதற்கெல்லாம் தங்களுக்கும் உரிமை உண்டு என்று நினைக்கிறார்கள்.

ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசு அரசியலை தரப்படுத்துகிறது. நியாயமற்ற அனைத்கும் ஒழிக்கப்படும்…” என்றார்.

Related posts

வழக்கறிஞர் அங்கியை அணிந்து கொண்டு வழக்குகளை பிரதமர் விசாரிக்க வேண்டும் – தர்மரத்ன தேரர்.

சுதந்திரக்கட்சி எதிரான கட்சி என்ற தோற்றம் ஏற்பட்டு விடக்கூடாது!

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை