ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது ஒரு நாடு என்ற வகையில் பின்பற்ற வேண்டிய சர்வதேச கொள்கை இணக்கப்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டங்கள் காணப்படுகின்றன.
ஒரு நாடாக சில சட்டங்களில் கையெழுத்திடப்படாவிட்டாலும், மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட அகதிகள் விடயம் ஏற்படும் போது நாம் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியொழுக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
என்னதான் சர்வதேச தர நியமங்கள் ஏற்பாடுகள் குறித்த புரிதல் இருந்தாலும், மியான்மரில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் கூட இந்த ரோஹிங்கியா மக்கள் உள்வாங்கப்படவில்லை.
இந்த ரோஹிங்கியா மக்கள் முகம்கொடுக்கும் நிலைக்கு மத்தியில் ஒரு நாடாக நாம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
மனிதாபிமானத்தை மதிக்கும் நாடாக இது பொறுப்பும் கடமையுமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரோஹிங்கியா அகதிகளின் உரிமைகள் தொடர்பில் இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
2024 டிசம்பர் 19 ஆம் திகதி கடல் வழியாக முல்லைத்தீவுக்கு வந்த இந்த அகதிகளை மனிதாபிமான மற்றும் சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் நடத்துவது முக்கியமாகும்.
இந்த அகதிகளுக்கான கடமைகளை நியாயமாக மேற்கொள்ள வேண்டும். இவர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது.
இந்த அகதிகள் விடயத்தில் எடுக்கப்படும் எந்தவொரு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்துக்கு எமது ஆதரவை நாம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.