அரசியல்உள்நாடு

ருஷ்தியின் விடயத்தில் மனச்சாட்சிப்படி செயற்படுவது மிகவும் முக்கியமானது – நீதியின் பக்கமே நிற்க வேண்டும் – NPP வேட்பாளர் சிராஜ் மஷ்ஹூர்

தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர் ருஷ்தி விடயத்தில், பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தவறான வாதங்களையே முன்வைக்கிறது என தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர் மேலும்…

தடுத்து வைத்திருப்பதற்கான உடனடிக் காரணம் ஸ்டிக்கர் ஒட்டிய விடயம் என்பது பரவலாகத் தெரிந்த ஒன்று.

அது கருத்துச் சுதந்திரத்துடன் தொடர்பானது என்பது மிகத் தெளிவான விடயம்.

ஆனால், இப்போது அவர் அடிப்படைவாதக் கருத்துகள் கொண்டவர் என்று கூறி, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று ஊகத்தின் அடிப்படையிலான விளக்கங்களை முன்வைக்கிறார்கள்.

இவை திசைதிருப்பல் உத்திகள் என்பது தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றன.

அத்தோடு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் BBC க்கு, ஜம்இய்யத்துல் உலமாவை சம்பந்தப்படுத்தி, குறித்த இளைஞர் ‘புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்’ என்று கூறியுள்ளார்.

இந்தக் கருத்தை, ஜம்இய்யத்துல் உலமா எங்கும் உறுதிப்படுத்தவில்லை. மேற்படி இளைஞருக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதையே ஜம்இய்யதுல் உலமாவின் ஊடக அறிக்கை சொல்கிறது.

ஆகவே, பொலிஸ் தரப்பிலேயே தவறு உள்ளது. அற்ப விடயத்திற்காக PTA யின் கீழ் தடுத்து வைத்துவிட்டு இப்போது காரணம் தேடுகிறார்கள்.

இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவும் மழுப்பலாகவே பதில் சொல்கிறார்.

அரசாங்கம் தொடர்ந்தும் இவ்விடயத்தைத் தவறாகவே கையாள்கிறது.

பொதுவாகவே, இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி, மனச்சோர்வையே ஏற்படுத்துகின்றன.

PTA, CTA, Online Safety Bill போன்ற விவகாரங்களில், அவற்றின் பாதகமான விளைவுகள் குறித்து விளக்கும் நிகழ்ச்சிகளை கடந்த காலங்களிலும் செய்து வந்துள்ளோம். இவற்றை எதிர்த்தும் வந்துள்ளோம்.

ஆதலால், தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.

மனச்சாட்சிப்படி செயற்படுவது மிகவும் முக்கியமானது.

நீதியின் பக்கமே நிற்க வேண்டும். கடந்தகாலத்திலும் நான் அவ்வாறுதான் இயங்கி வந்துள்ளேன்.

சிராஜ் மஷ்ஹூர்.
03.04.2025.

Related posts

பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் – பிரதமர் ஹரிணி

editor

சுதந்திர தினத்தினை முன்னிட்டு போக்குவரத்து மட்டு

மீண்டும் தலைதூக்கும் கொவிட்