(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாளைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளரிடம் எழுத்துமூலம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் பிரதியொன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று (21) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வழங்கிய உத்தரவுக்கு அமையவே படைக்கல சேவிதர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ரிஷாட் பதியுதீனை நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானம் எடுத்திருப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாளை மற்றும் நாளைமறுதினம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவிப்பதாகவும் அக்கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே கௌரவ சபாநாயகர் இத்தீர்மானத்தை எடுத்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්