உள்நாடு

ரிஷாட் கைதிற்கு அரசியல் நோக்கமே காரணம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(UTV | கொழும்பு) – ரிஷாட் பதியுதீன் கைதானது அரசியல் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமே என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று(25) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்ட செய்தியை நாங்கள் அறிந்தவுடன் அதிர்ச்சியுற்றோம்.

நாங்கள் குறித்த கைது சம்பந்தமாக விபரங்களைத்தேடி பார்த்தபொழுது எம்மை பொறுத்தவரையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் காரணத்தின் நிமித்தம் இரண்டு வருடங்களுக்கு முதல் அவர் அந்த செயற்பாட்டில் உதவிகள் புரிந்ததாக குற்றஞ்சாட்டி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சந்தேக நபராக கைது செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம். இதற்கு முதலும் ரிஷாட் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு அதற்குப் பிற்பாடு விடுவிக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு உதவி செய்திருந்தார் என்ற பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே திடீரென இரவோடிரவாக கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

எம்மை பொறுத்தவரையில் அவர் கடந்த இரண்டு வருடங்களாக அவர் தொடர்பாக இடம்பெறுகின்ற விடயடங்களை எடுத்து பார்க்கின்ற பொழுது அவருடைய தற்போதைய கைதானது அரசியல் நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்ட ஒரு விடயமாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

ஏனைய நாடுகள் போன்றல்ல. இலங்கையிலே இருக்கக்கூடிய பொலிஸ் பிரிவு மிகவும் துரதிஸ்டவசமாக இந்த நாட்டிலே ஆட்சியிலுள்ள கட்சியினுடைய ஒரு அங்கமாக செயற்படுகின்ற ஒரு நிலைமையினைத்தான் காணக்கூடியதாக இருக்கின்றது.

பொலிஸ் பிரிவானது ஒரு சுயாதீனமாக செயற்படுகின்ற கட்டமைப்பாக இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அதிலும் குறிப்பாக இன்றைக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதென்பது உலகத்திலேயே மிகவும் வன்மையாக கண்டிக்கப்படுகின்ற ஒரு மோசமான கொடூரமான ஒரு சட்டமாக கருதப்பட்டு அந்த சட்டம், சட்டப் புத்தகங்களில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்ற பின்னணியில் இதற்கு முதலில் இருந்த அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைவாக ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவதாக சொல்லி இருந்தும் இந்த அரசாங்கமும் அதில் பாரிய திருத்தங்களை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைவாக திருத்தங்களை செய்வதற்கு தயார் என்று ஐநா மனித உரிமை போன்ற கட்டமைப்புகளுக்கு வாக்குகளை வழங்கியிருந்தும் இன்றைக்கு அதே மோசமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே தான் றிசாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்த பயங்கரவாத தடைச் சட்டம் என்கின்ற மோசமான தடைச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சி என்ற வகையில் எங்களுக்கு நன்றாக தெரியும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்ற பொழுது அந்த நடவடிக்கைகள் ஊடாக நீதியைப் பெறுகின்ற விடயத்தை விட அநீதி நிலைநாட்டப்படுகின்ற ஒரு யதார்த்தம் தான் இங்கு இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றவர்களும் வழக்குகள் அந்த சட்டத்தின் கீழே மேற்கொள்ளப்படுகின்ற இடத்தில் ஒன்று மிகத் தெளிவாக விளங்குகின்றது.

கடந்த அனுபவங்களை எடுத்து பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய பெரும்பான்மையான உதாரணங்களில் அரசாங்கத்திற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்க படுகின்ற அந்த குறிப்பிட்ட நபருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாத ஒரு நிலைமையில் தான் அவர்கள் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். அந்த வகையிலே நாங்கள் ரிசாட் பதியுதீன் அவர்களுடைய கைது செயற்பாட்டையும் நாங்கள் அந்த கோணத்தில் தான் பார்க்கின்றோம்.

அவருக்கு எதிராக சாட்சியங்கள் இருந்திருந்தால் எப்பொழுதோ இந்த விடயங்கள் விசாரிக்கப்பட்டு இருந்திருக்கும்.ஆனால் அப்படி நடக்கவில்லை. இன்றைக்கு அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் மிக மோசமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் அந்த குற்றங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய எவரையும் கைது செய்யாமல் அரசாங்கமே அதன் பின்னணியில் இருந்ததாக பாரிய குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டிருந்த நிலையில் கத்தோலிக்க ஆயர் மல்கம் ரஞ்சித் போன்றவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில் அனைத்து விடயங்களிலும் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் உண்மையான நபர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்காமல் மக்களை திசை திருப்பி இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒரு பிழையான திசைக்கு மக்களுடைய பார்வையை கொண்டு செல்வதற்குமான நடவடிக்கைகளாக தான் நாங்கள் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது.

இந்த கைது நடந்த விதம் கைது இடம்பெற்ற நேரத்தையும் எடுத்து பார்க்கின்ற பொழுது நிச்சயமாக ஒரு அரசியல் பின் நோக்கத்தோடுதான் இது நடைபெற்றதாக நாங்கள் பார்க்கின்றோம். மீண்டும் நாங்கள் இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

நாங்கள் அரசாங்கத்திற்கு சவால் விடுகின்றோம் றிசாட் பதியுதீன் ஆக இருக்கலாம் ஏன் தமிழ் அரசியல் கைதிகள் ஆக இருக்கலாம் வேறு எருவராகவும் இருந்தாலும் உண்மையிலேயே எதிராக சாட்சியங்கள் இருந்தால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் நாட்டில் இருக்கக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதற்குரிய அனைத்து சட்ட ஒழுங்குகளும் இருக்கின்றன. சாட்சியங்கள் இல்லாமல் அந்த நடவடிக்கைகள் ஒருநாளும் நிரூபிக்கப் பட போவதில்லை.

சாட்சியங்கள் இருந்தால் நீங்கள் தயக்கமில்லாமல் சாதாரண சட்டங்களின் கீழே கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.ஆனால் நீங்கள் அதை செய்ய மறுத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது முற்றுமுழுதாக சாட்சியம் இல்லாத இடத்தில் நபர்களை வழக்குகளின் ஊடாக தண்டிப்பதை விட வழக்கு முடிவதற்கு முதலே தண்டனையும் முழுமையாக அனுபவிக்குமாறு நபர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் நீங்கள் இந்த சட்டத்தை பயன்படுத்துகிறீர்கள் என்பதனையும் நாங்கள் இங்கு பகிரங்கமாக கூற விரும்புகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உக்ரேன் – ரஷ்யா மோதல் : இலங்கை வாக்களிக்கவில்லை

இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதி – ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை

editor

35 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!