வகைப்படுத்தப்படாத

ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை, கட்சியினர் வேதனை

(UTV | கொழும்பு) – எந்த விதமான குற்றச்சாட்டுக்களுமின்றி, தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு, சிறையிலும் மிகப்பெரிய அநியாயம் இழைக்கப்படுவதாக, அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியின் விஷேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி, நள்ளிரவில், சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்ட தலைவர் ரிஷாட் பதியுதீன், சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக, சி.ஐ.டி யினரின் பொறுப்பில், நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவரை சி.ஐ.டி யினர் துருவித்துருவி விசாரித்த போதும், அவர் மீது எவ்வித குற்றங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், சி.ஐ.டி யினர், திடீரென, அவசர அவசரமாக, ஆதாரமற்ற ஒரு விடயத்துக்காக அவர் மீது குற்றஞ்சாட்டி, கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அன்றைய தினம் நீதவானின் உத்தரவின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு, சிறைச்சாலையில் பல்வேறு அநியாயங்கள் இழைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சுமார், 23 மணி நேரம் சிறைச்சாலையில், ஷெல் ஒன்றில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை, அந்த ஷெல்லுக்குள்ளே இருக்கும் இன்னுமொரு பிரத்தியேக ஷெல்லில் 13 மணி நேரத்துக்கு மேலாக தினமும் அடைத்து வைக்கிறார்கள். அதாவது, மாலை 5 மணி தொடக்கம், காலை 6 மணி வரை இவ்வாறான பழிவாங்கும் படலம் தொடர்கிறது. குறித்த 13 மணி நேரமும் அவர் தனது ஷெல்லில், ஒரு குடிநீர் போத்தலுடன் மட்டுமே நேரத்தைக் கழிக்க வேண்டியுள்ளது. மின்சார வசதிகள் இல்லாத அந்த ஷெல்லில், வியர்வையுடன் நுளம்புக்கடியின் தொல்லையும் அவரை பெரிதும் கஷ்டப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. வெறுமனே பாயிலும் தரையிலுமாக படுத்துறங்கும் அவர், மலசலகூடம் செல்வதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதிகாலை 6 மணிக்கு அவர் இருக்கும் தனியான ஷெல் திறக்கப்பட்டு, பொதுவான ஷெல்லுக்குள் அவர் விடுவிக்கப்பட்ட பின்னர்தான், அவர் காலைக் கடன்களை முடிக்க வேண்டிய பரிதாப நிலை!

இந்த 13 மணி நேரத்துக்குள் அவருக்கு வழங்கப்படும் ஒரு போத்தல் நீர்தான் தாகத்தை தீர்ப்பதற்கும், வுழூச் செய்வதற்கும் பயன்படுகிறது. கடந்த வாரம், நோன்பு நோற்பதற்காக, தனியான ஷெல்லை, அதிகாலை நான்கு மணிக்கு திறந்து விடுமாறு அவர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதும், அவர் நோன்புக் கடமையை நிறைவேற்றியதாக கூறப்படுகின்றது. தினமும் காலையில் அரை மணித்தியாலமும், மாலையில் அரை மணித்தியாலமுமே இந்த ஷெல்களை திறந்து, அவரை வெளியே உலாவ விடுகின்றனர். இவ்வாறு ஒரு சமூகத் தலைவர் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருவதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் வேதனையுடன் தெரிவித்தார்.

“இலங்கையின் வரலாற்றில், முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, இத்தனை அநியாயங்களை செய்கிறார்கள். எந்தவொரு ஆட்சியிலும், எவருக்கும் நடக்காத கொடுமை, எமது கட்சியின் தலைவருக்கு நடைபெறுகின்றது. அவர் தொடர்ந்தும் பழிவாங்கப்படுகிறார். இதனைத் தட்டிக் கேட்க எமது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிக்கள் கூட முன்வரவுமில்லை. ஆட்சித்தலைமையிடம் வலுவான கோரிக்கைகள் எதனையும் விடுத்து, அவரை விடுவிக்க எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுமில்லை.

கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும், தலைவர் ரிஷாட்டின் அபிமானிகளும் மிகுந்த மனவேதனையுடன் இருக்கின்றனர். நீதி அமைச்சராக இருக்கும் அலி சப்ரி கூட, நீதியாக இதுவரை நடந்துகொள்ளவில்லை. இந்த அநியாயங்களை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல பேசாமடந்தையாகி அவர் இருக்கிறார்.

கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில், அவர் மீது சுமத்தப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் பின்னடித்து வருகின்றார்கள். தலைவர் ரிஷாட்டின் சட்டத்தரணிகள், அவரது பிணை மனு கோரிக்கை தொடர்பில், வலுவான வாதங்களை முன்வைக்க, ஒவ்வொரு தவணையிலும் ஆயத்தமாகவுள்ள போதும், நீதிமன்றத்துக்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தினர் இரண்டு தடவைகள் பிரசன்னமாகவில்லை. கொரோனாவைக் காரணம் காட்டி அவர்கள் வருகைதர பின்னடிக்கிறார்கள். ஆனால், தலைவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் மீதான ஆதாரமற்ற வழக்குகளுக்கு முண்டியடித்துக்கொண்டு, ஓடோடி வருகின்றனர். இதுதான் எமது வேதனையாக உள்ளது.

ஒரு சிறுபான்மை சமூகத்தின் மக்கள் பிரதிநிதி, ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இவ்வாறு அடைத்து வைத்து, கொடுமை செய்வது எந்த விதத்தில் நியாயம்? இவற்றை தட்டிக்கேட்க யாருமின்றி, பாராமுகமாக இருப்பவர்களை எண்ணி மிகுந்த வேதனையடைகிறோம்.

எனவே, தலைவர் மன நிம்மதியுடன் இருக்கவும், அவர் விரைவில் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவும் இறைவனை தொழுது, பிரார்த்திக்குமாறும், கட்சியின் சார்பில், தாம் வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Related posts

කොළඹ වරායේ ගොඩකළ භූමි ප්‍රමාණය කොළඹ දිස්ත්‍රික් පරිපාලන ඒකකයට

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

හදිසි නීතිය මසකින් දර්ඝ කෙරේ