உள்நாடுசூடான செய்திகள் 1

ராகுல் காந்தியின் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

(UTV | கொழும்பு) –

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தகுதியிழப்புக்கு ஆளானார். பின்னர் கீழ்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றமும் பிறகு குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 7-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காவிட்டால், பேச்சுரிமை, கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பது போலாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 111 நாட்களாக அவரால் எம்.பி. பணிகளை செய்ய இயலவில்லை.மேலும், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடும். எம்.பி. பதவி தகுதியிழப்பால் அவரால் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்க முடியவில்லை. எனவே, ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார். (யூடீவி  செய்தி இலங்கை)

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுங்கத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களை விடுவிப்பது குறித்து இன்று கலந்துரையாடல்

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டத்தில் அரசாங்கம் [VIDEO]