மலர்ந்திருக்கும் ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் சகல மக்களுக்கும் அமைதியினையும் மகிழ்ச்சியையும் வழங்குவதுடன் செழிப்பினை அளிக்கும் வளமான பண்டிகையாகவும் அமைய பிராத்திக்கிறேன் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
நோன்புப்பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரமழான் நோன்புப் பெருநாள் பண்டிகைக் காலமானது எமது நாட்டில் பல்வேறு சமய மற்றும் கலாசார சமூகங்களுக்கிடையில் சகவாழ்வினையும் புரிந்துணர்வினையும் கட்டியெழுப்ப சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது.
இது ஒரு மத நிகழ்வு மட்டுமல்லாது தனிப்பட்ட மற்றும் சமூக நல்லிணக்கத்தின் காலகட்டமாகும்.
இதிலிருந்து எழும் சகவாழ்வு, ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை ஆகிய விழுமியங்களே எமது புதிய அரசாங்கத்தின் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொலைநோக்கு வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பது எனது நம்பிக்கையாகும்.
சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் சகல இனங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கையின் இஸ்லாமிய சகோதரர்களால் கொண்டாடப்படும் முதலாவது ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் இதுவாகும் சிறப்புவாய்ந்த ரமழான் நோன்புப் பெருநாளை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள சகல இஸ்லாமியர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் சகல மக்களுக்கும் அமைதியினையும் மகிழ்ச்சியையும் வழங்குவதுடன் செழிப்பினை அளிக்கும் வளமான பண்டிகையாகவும் அமைய பிரார்த்திக்கிறேன் என்றார்.