அரசியல்உள்நாடு

ரணில் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது – தலதா அத்துகோரள

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம். இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன.

நாங்கள் இரண்டு தரப்பினரும் பிரிந்து செயற்பட ஆரம்பித்ததாலே தேசிய மக்கள் சக்திக்கு ஆட்சிக்கு வர முடியுமாகி இருக்கிறது.

அதனால் எதிர்காலத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருந்து வருகிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூரட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் குறி்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையை பயன்படுத்திக்கொண்டு நினைத்த பிரகாரம் செயற்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்.

கூட்டுறவு சங்க தேர்தல்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட ஆரம்பித்துள்ளதன் காரணமாக அரசாங்கம் தோல்வியடைய ஆரம்பித்திருக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடி நாங்கள் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கின்றன.

அதனால் ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் ஆரம்பம் முதல் இருந்து வருகிறேன்.

நாங்கள் பிரிந்து செயற்பட்டதாலே தேசிய மக்கள் சக்தி எங்களை முந்திச்செல்ல முடியுமாகி இருந்துள்ளது.

எனவே இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் கிராமங்களில் இருக்கும் எமது ஆதரவாளர்களும் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து செயற்பட முடியுமன இணக்கத்தை ஏற்டுத்திக்கொள்ள வேண்டும்.

ஜேஆர். ஜயவர்த்தனவுக்கு 1977இல் மக்கள் பாரிய மக்கள் ஆணை ஒன்றை வழங்கி இருந்தது. அதேபோன்றதொரு மக்கள் ஆணையையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கியது பாரியதொரு எதிர்பாரப்புடனாகும்.

ஆனால் நாட்டில் தற்போது தேங்காய் விலை, அரிசி விலை பார்க்கும்போது இந்த அரசாங்கத்திடமிருந்து இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ளபோதும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இல்லை.

ஆனால் திருடர்களை பிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். திருடர்களை பிடிக்கும் பொறுப்பை நானும் மேற்கொண்டிருந்தேன்.

அதனால் ஆட்சியில் இருப்பவர்கள் எப்படி திருடர்களை பிடிக்கிறார்கள் என எங்களுக்கு தெரியும். அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்ய அநுரகுமாரவுக்கு நினைத்த பிரகாரம் செய்ய முடியாது.

தான் நினைத்தால் மஹிந்த ராஜபக்ஷ்வின் ஏனைய பாதுகாப்புகளையும் நீக்குவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருப்பது ஏகாதிபத்திய ஆட்சியை கொண்டு செல்வதற்கு அல்ல.

குற்றச்சாட்டுக்கள் இருக்குமானால் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை.

அவ்வாறு இல்லாமல் நாள்தோறு ஒவ்வொரு பிரச்சினையை எழுப்பி, மக்களின் பிரச்சினையை மறைத்து வருகின்றனர். வரி குறைப்பு தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதையே மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ஆனால் தெரிவித்த எதனையும் அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எரிபொருள் லீட்டர் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சருக்கு 150 ரூபா செல்வதாக தெரிவித்தனர். அதனை நிறுத்தி, எரிபொருளின் விலையை குறைப்பதாக தெரிவித்தனர்.

மக்கள் அதனையே எதிர்பார்த்து இருக்கின்றனர். இவை எதனையும் செய்ய முடியாமல் போகும்போது, ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையால் இதனை உடனடியாக செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் செய்வதாக தெரிவித்த விடயங்கள் எதையும் செய்ய முடியாமல் போகும்போது அதற்கு ரணில் விக்ரமசிங்கவின் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் தற்போது கடைப்பிடித்து வருகிறது.

ஆனால் வங்குராேத்து அடைந்த நாட்டை மீட்டெடுப்பதற்கு ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் கதைப்பதில்லை என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

தேனீரின் விலை 30 ரூபாவாக குறைப்பு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு