அரசியல்உள்நாடு

ரணில் தொடர்பில் போலிப்பிரசாரம் – வன்மையாக கண்டிக்கிறோம் – ருவான் விஜேவர்த்தன

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார்.

இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு தொடர்ந்து அவரை அவமதிக்கும் வகையில் பொய் தகவல்கள் சமூகமயமாக்கப்பட்டு வருவதை காணகூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் அந்த விடயங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்கு பாரிய பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அதேபோன்று கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதும் அவராகும். என்றாலும் அவரை இலக்குவைத்து பொய் தகவல்கள் சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (6) பதில் பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக பிரதி பொலிஸ்மா அதிபர் (மனிதவள முகாமைத்துவம்) சிசிர குமாரவினால் இடமாற்றம் குறிப்பிட்டு எழுத்து மூலமான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெயரிடப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் செயற்படும் வகையில் சமூகமளிக்குமாறு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் இதுதொடர்பாக சமூகவலைத்தலங்களில் பிரசரமாகி சில மணி நேரங்களுக்கு பின்னர் பதில் பொலிஸ்மா அதிபரால், குறித்த ஊடக அறிக்கை போலியானது எனவும் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பதில் பொலிஸ்மா அதிபர் இதுதொடர்பாக முறையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெறுப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் தொடர்புள்ள தரப்பொன்று செற்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் பயன்படுத்திய ஜனாதிபதி மாளிகையின் சமையலறை என குறிப்பிட்டு, வெளிநாடு ஒன்றின் சமையலறை ஒன்றின் காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூகமயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தகவல்களின் உண்மை, பொய் தன்மையை முறையாக புரிந்துகொள்ள முடியாத, மூளை வளர்ச்சியற்ற சிலரால் இது சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பயன்படுத்தியது தேசிய மற்றும் சர்வதேச உத்தியோகபூர் கடமைகளுக்கு மாத்திரமாகும். ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வீட்லே வசித்து வந்தார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இலங்கை முகம்கொடுத்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பொறுப்பில் இருந்து தப்பிச்செல்லாமல் பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்வகையில் முன்னெடுத்திருக்கும் கீழ் மட்டத்திலான சேறு பூசும் பிரசாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் கவலையடைகிறது. இந்த நாட்டு மக்களுக்கு எது சத்தியம் எது பொய் என்பதை புரிந்துகொள்வதற்கான பகுத்தறிவு இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

அதேபோன்று சேறு பூசும் பிரசாரம் மேற்கொண்டு காலத்தை வீணடிக்காமல் தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நாங்கள் ஆளும் அரசாங்காத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வார இறுதிக்குள் வெளியாகும்

 சிறுவர்கள் குழந்தைகள் பிச்சை எடுத்தால் பொலிஸில் தெரிவியுங்கள்