அரசியல்உள்நாடு

ரணிலின் அரசியல் ஆயுட்காலம் நிறைவு – எம்முடன் கைகோர்க்க வேண்டும் – விமல் வீரவன்ச

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுட்காலம் செப்டெம்பர் 21 ஆம் திகதியுடன் நிறைவடையும். தேசியத்தை கருத்திற் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பிரதான வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களுடன் பகிரங்க விவாதத்துக்கு நாங்கள் தயார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

அநுராதபுரம். நகரில் ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற சர்வஜன சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டுக்காக அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயற்பட்டோம். எமக்கும் சுயநல நோக்கங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட முடியும்.ஆனால் ஒருபோதும் நாங்கள் அவ்வாறு செயற்படவில்லை.

2019 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை பலவீனப்படுத்தக் கூடாது என்பதற்காகவே 7 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வஜன சக்தி என்ற புதிய அரசியல் பரிணாமத்தை தோற்றுவித்துள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் ஆயுட்காலம் எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையும், அவருக்கு ஆதரவு வழங்க சென்றுள்ளவர்களின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

 பிரதான வேட்பாளர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எவரும் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவதாக குறிப்பிடவில்லை. எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன் நாட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வினை பெற்றுக்கொடுப்போம்.

2019 ஆம் ஆண்டு தேசியத்தை முன்னிலைப்படுத்தி கோட்டபய ராஜபக்ஷவை கொண்டு வந்தோம். நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அமைய கோட்டபய ராஜபக்ஷ செயற்படவில்லை.குடும்ப உறுப்பினர்களின் தவறான ஆலோசனைகளை  பெற்று முறையற்ற வகையில் செயற்பட்டார்.பின்னர் விரட்டியடிக்கப்பட்டார்.

தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் அனைத்து தரப்பினரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும். பொருளாதார கொள்கை தொடர்பில் பிரதான வேட்பாளர்கள்  என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் பகிரங்க விவாதத்துக்கு நாங்கள் தயார் என்றார்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு – அமைச்சர் காஞ்சன

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது