அரசியல்உள்நாடு

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

2011ஆம் ஆண்டு காணாமல் போன மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கு விசாரணையின் சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அது தொடர்பான சாட்சியங்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர வேறு எந்த நீதிமன்றத்திலும் வழங்கத் தயார் என அவரது சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அழைக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பாக யாழ் நீதிமன்றில் சாட்சியமளிக்க முடியாது​​என கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால், யாழ்ப்பாணம் நீதிமன்றத்தைத் தவிர வேறு நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த மனுவை மார்ச் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் அன்றைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவை 2019 செப்டம்பர் 27 அன்று ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவிப்பு விடுத்திருந்தது.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும், எனவே குறித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்படுவதால் சாட்சியமளிக்க அழைக்க முடியாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறும், கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்துள்ளமையினால் சாட்சியமளிக்க அழைக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் குறித்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

Related posts

மறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

சோளத்திற்கு விலை நிர்ணயம்

கொரோனா மரணங்கள் 46