உள்நாடு

மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம்

(UTV | கொழும்பு) – சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 74 வது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி 21 வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்த பாதைகளுக்குரிய மாற்றுப் பாதைகளை பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், இந்நிகழ்வுக்கான அணிவகுப்பு ஒத்திகை ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திகை இடம்பெறவுள்ளன. எனினும், சுதந்திர சதுக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து இக்கால பகுதியில் நெரிசலைக் குறைக்கும் வகையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் வீதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதனூடாக பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் நெரிசலை குறைக்கும் வகையில் ஒத்திகை இடமபெறும் நேரத்தில் தேவையான வீதிகள் மாத்திரம் மூடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுதந்திர தின வைபவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் பிரதம அதிதிகள் உள்ளிட்ட அனைவரும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ள வாகனத் தரிப்பிட அட்டையுடன காலை 7.30 மணிக்கு முன்னதாக வருகை தருமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

கஞ்சா ஏற்றுமதி குறித்து மற்றுமொரு தகவல் …

வயிற்றில் ஆணியுடன் நாட்டுக்கு, திரும்பி வந்த பெண்!

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா