உள்நாடு

மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதி சினிமா விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது!

(UTV | கொழும்பு) –

இலங்கைத் திரைப்படத்துறை சர்வதேசத் தரத்தை எட்ட வேண்டும். அதற்காக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் உட்பட அதனுடன் இணைந்த சகல நிறுவனங்களையும் மறுசீரமைக்கும் பணிகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு தாமரைத் தடாக திரையரங்கில் நடைபெற்ற “ஜனாதிபதி சினிமா விருதுகள் – 2023” விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

அரங்காற்றுகைக் கட்டுப்பாட்டுச் சபைக்கு மாறாக அரங்காற்றுகை பன்முகப்படுத்தல் சபை ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சினிமாவில் இருந்து தணிக்கை என்ற சொல்லை, நீக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது கலைப் படைப்புகள் பல்வேறு குற்றவியல் சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்டு கலைஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனைத் தவிர்க்க திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளை வகைப்படுத்தும் சபைக்கு முதலில் சமர்ப்பிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த அனைத்து சட்டங்களையும் அடுத்த வருடம் முதல் அமுல்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார். மூன்று வருடங்களுக்கு பின்னர் ஜனாதிபதி சினிமா விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் திரையிடப்பட்ட 42 திரைப்படங்களின் அடிப்படையில், பிரபல திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 44 விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத்தவிர மேலும் 09 விசேட விருதுகளும் வழங்கப்பட்டன. இங்கு, 2020 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை கலாநிதி நந்தா மாலனி பெற்றுக்கொண்டதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நந்தா மாலனி அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று விருதை வழங்கியது சிறப்பம்சமாகும்.
1963ஆம் ஆண்டு சரசவி விருது வழங்கும் விழாவில் கலாநிதி நந்தா மாலனிக்கு இலங்கை சினிமாவில் பின்னணிப் பாடகருக்கான விருது வழங்கப்பட்டதாகவும், அந்த நிகழ்வில் தனக்கும் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்தார். கலாநிதி நந்தா மாலனி இலங்கை சினிமா மற்றும் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக முழு தேசத்தின் மரியாதையும் நன்றியும் உரித்தாவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை சினிமாத் துறைக்கு விசேட பங்காற்றியவர்களுக்கு வழங்கும் “யுக அபிமானி” விசேட விருது டே.குணரட்ணம் நினைவாக சந்திரன் ரட்ணம், சுவினிதா வீரசிங்க மற்றும் சிறில் விக்ரமகே ஆகியோருக்கு ஜனாதிபதியின் கரங்களினால் விருது வழங்கப்பட்டன. ஜனாதிபதியினால் “சுவர்ணசிங்க” விருதுகளும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக கமல் அத்தர ஆராச்சியும், 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக குமார திரிமாதுரவும் ஜனாதிபதி விருதுகளை பெற்றுக்கொண்டனர். அதனையடுத்து 2019இற்கான சிறந்த நடிக்கைக்கான விருதை சமாதி லக்சிறியும், 2020 இன் சிறந்த நடிக்கைகான விருதை நீடா பெர்னாண்டோவும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்பாளராக அனுருத்த ஜயசிங்கவும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த தயாரிப்பளாராக விசாகேச சந்திரசேகரமும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது “கின்னென் உபன் சீதல” திரைப்படத்திற்கும் 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக “The Newspaper” திரைப்படமும் தெரிவு செய்யப்பட்டன. இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
12-13 வயது மாணவனாக முதல் சரசவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேலும், முதல் ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்தக் காலத்துக்கும் இன்றைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பெரிய தொழில்நுட்ப புரட்சி நிகழ்ந்துள்ளது. இன்று நமக்கு சினிமாவும், தொலைக்காட்சியும் இருக்கிறது. தனித்தனியாக இருந்த இவ்விரு துறைகளும் இன்று ஒன்றாக இணைந்துள்ளன. மேலும் இந்த திரைப்படங்கள் அனைத்தையும் கைபேசியில் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் இன்று அனைத்து நாடுகளும் சர்வதேச சினிமாவுடன் இணைந்துள்ளது. இதன் மூலம் சினிமா பாரிய துறையாக மாறியுள்ளது. அந்தத் துறையில் நாம் முன்னேற வேண்டும். அந்த போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் திறன் எங்கள் படைப்பாளர்களுக்கு இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். எனவே புதிதாக சிந்தித்து நாட்டின் சினிமாவை புதிய பயணத்திற்கு தயார்படுத்த வேண்டும்.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளோம். மேலும், திரைப்படத் துறையும், தொலைக்காட்சி ஊடகமும் ஒரே துறையாக கருதப்பட வேண்டும். இது தவிர அனைத்து திரையரங்குகளும், திரைப்பட தயாரிப்பு பின்னணி இடங்களும் அபிவிருத்தி செய்யபபட வேண்டும்.
அந்த பணிகளை தனியொரு சபையின் கீழ் முன்னெடுத்துச் செல்லவும், சர்வதேச ரீதியில் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை நாட்டுக்கு வரவழைத்து அவர்களின் அனுபவங்களை இந்நாட்டு கலைத்துறையினர்,தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்ள அவசியமான ஏற்பாடுகளை செய்துக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நாட்டு அரங்காற்றுகை கட்டுப்பாட்டுச் சபை 100 வருடங்கள் பழமையானது அதற்கு மாறாக அரங்காற்றுகை தரம்பிரித்தல் சபையொன்றை நிறுவ எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்படைப்புகளிலிருந்து “தணிக்கை” என்ற விடயத்தை அகற்ற எதிர்பார்ப்பதோடு,

கலைப்படைப்புகளை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதைத் தடுக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. பழைய சட்டங்களில் சிறைப்பட்டு கிடப்பதை விடுத்து கலைப் படைப்புக்களை தரம்பிரித்தல் சபைக்குச் சமர்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சட்டம் அடுத்த வருடத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. சினிமா துறையின் எதிர்காலத்திற்காக அரசியல் நோக்கமின்றி அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான கலாநிதி பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்‌ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜீர அபேவர்தன, கயந்த கருணாதிலக்க, ஓய்வுபெற்ற ரியர் அத்மிரால் சரத் வீரசேகர, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு மாரசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி தீபால் சந்திர ரத்ன, இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகள், அரசாங்க அதிகாரிகள், பிரபல நடிகர், நடிகைகள், திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

           

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

CID இனால் கைது செய்யப்பட்ட அசேல சம்பத் பிணையில் விடுவிப்பு

பணவீக்கம் அதிகரிப்பு

துறைமுக நகர சட்டமூல மனுக்கள் : நாளை வியாக்கியானம்