உள்நாடு

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: முஸ்லிம் கவுன்ஸிலின் தெளிவை எதிர்பார்க்கும் உலமா சபை!

(UTV | கொழும்பு) –

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தம் சம்பந்தமான முன்மொழிவை வழங்கியதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துகளையும் குறித்த சட்டத்திருத்தத்தின் முன்மொழிவில் வரவேண்டிய திருத்தங்களையும் முன்வைத்தார்கள். அதில் 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் எவ்வாறு ஒரு முன்மொழிவு வழங்கப்பட்டதோ அதேபோன்று முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் ஒருமித்த ஒரு கருத்துக்கு வரவேண்டும் என்பதற்காக, மார்க்க விடயங்களில் முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையான வழிகாட்டல்களையும் மார்க்கத் தீர்ப்புகளையும் காலாகாலமாக வழங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிடம் இதுதொடர்பான கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க கடந்த 11 ஆம் திகதி முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடலொன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.

அக்கலந்துரையாடலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டதோடு மேலதிகமான சில முன்மொழிவுகளும் முஸ்லிம் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் உள்வாங்கி ஓர் ஆவணம் தயாரிக்கப்பட்டு அதில் கையொப்பமிடுவதற்காக அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு முன்பே முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்ட திருத்தம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தன்னுடைய நிலைப்பாட்டை நீதியமைச்சுக்கு வழங்கியிருக்கிறது. குறித்த ஆவணமானது முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்றுபட்டு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மார்க்கத்திலுள்ள சில சட்ட விடயங்கள் உள்வாங்கப்படாத காரணத்தினால் குறிப்பாக பெண்களுக்கு மார்க்கத்தில் வழங்கப்பட்டிருக்கக் கூடிய உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக சிலருடைய அவதானம் அமைந்திருக்கிறது.

காலத்திற்கேற்ற மாற்றங்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதிலும் குறிப்பாக பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் தற்போதைய சட்டத்தில் இல்லாத குல்உ, மதாஃ போன்ற பெண்களின் உரிமைகள் சட்டமாக்கப்பட வேண்டும் என்பதிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.


இதனடிப்படையில் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்த முன்மொழிவில் காலத்துக்குத் தேவையான, மார்க்கத்தின் அடிப்படைகளுக்கும் இலக்குகளுக்கும் மற்றும் காலாகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்ற இஸ்லாமிய கலாசாரத்துக்கும் முரண்படாத வகையில் நெகிழும் தன்மைகளை உள்ளடக்கிய அழகானதொரு முன்மொழிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கியிருக்கிறது. நிர்வாக ரீதியாக ஏற்பட வேண்டிய மாற்றங்கள், மார்க்கத்தின் அடிப்படைகளோடு சம்பந்தப்பட்ட மாற்றங்கள் என்று அவற்றை பிரதான இரண்டு வகையாக அடையாளப்படுத்தியிருக்கிறது.

அதில்,

01) கணவன் சுயமாக தலாக் கொடுத்தால் அவசியம் மதாஉ கொடுக்கப்படல் வேண்டும். ஒரு பெண்ணை அநியாயமாக நிர்ப்பந்தித்து தலாக் கொடுக்காமல் பஸ்க் இற்கு ஒரு கணவன் தள்ளும் பட்சத்தில் அப்பெண்ணுக்கு மதாஉ வை வழங்கும் உரிமை முஸ்லிம் விவாக, விவாரத்து சட்டத்துக்குள்ளால் உள்வாங்கப்படல் வேண்டும்.

02) குல்உ (ஒரு பெண் கணவரிடத்தில் மஹ்ர் மற்றும் நஷ்டஈடுகளை திரும்பக் கொடுத்து விவாகரத்தை பெற்றுக் கொள்வதாகும்.) இது தற்போதைய சட்டத்தில் இல்லாத ஒன்று. எனவே இது சரியாக இச்சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

03) தலாக், குல்உ, பஸ்க் ஆகிய விவாகரத்து முறைகள் ஆண், பெண் இருசாராருடைய உரிமையும் கண்ணியமும் மானமும் பாதுகாக்கக்கூடிய வகையில் அமைவதோடு இஸ்லாத்தில் பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பான தாபரிப்புச் செலவு தந்தைக்கு இருப்பதனால் அது சார்ந்த விடயங்களும் உரிமைகளும் தெளிவாக சட்டமாக்கப்படல் வேண்டும்.

04) திருமணப் பதிவில் வலியின் கையொப்பத்துடன் சேர்த்து மணமகள் சம்பந்தமும் கையொப்பமும் கட்டாயமாக இருத்தல் வேண்டும்.

05) ஓர் ஆண் காதியாகவும் ஆணுக்கு உதவியாக இரண்டு பெண்கள் அதிகாரமுள்ள ஜுரிகளாகவும் நியமிக்கப்படல் வேண்டும்.


போன்ற இன்னும் பல காலத்துக்கு அவசியமான, மார்க்கத்துக்கு முரண்படாத முன்மொழிவுகளை அது உள்ளடக்கியிருக்கிறது.
இந்த 20 முன்மொழிவுகளில் முஸ்லிம் கவுன்ஸில் எதனை நிராகரிக்கிறது என்பதை முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.


ஏனெனில் முஸ்லிம் கவுன்ஸிலானது பல அமைப்புகளை ஒன்றுசேர்த்த அமைப்பாக தன்னை காட்டிக்கொள்ள விரும்பினாலும் அவர்களால் பட்டியலிடப்படுகின்ற 20 க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த முன்மொழிவுகளுக்கு சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு கடிதங்களை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் முஸ்லிம் கவுன்ஸிலால் குறிப்பிடப்படுகின்ற அத்தனை அமைப்புகளினதும் கருத்துகளை முஸ்லிம் கவுன்ஸில் உள்வாங்கியதா, எப்போது அந்த சந்திப்பு நடைபெற்றது, அதில் இவ்விடயம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் யாவை, முஸ்லிம் கவுன்ஸிலின் நிராகரிப்பை அந்த அமைப்புகள் ஏற்றுக்கொண்டதா என்பதையும் சமூகத்திற்கு தெளிவுபடுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் கவுன்ஸிலிடத்தில் வேண்டிக்கொள்கிறது.

அதுமாத்திரமின்றி முஸ்லிம் கவுன்ஸில் தனக்குக் கீழ் இணைத்திருக்கின்ற பல அமைப்புகள், அந்த அமைப்புகளின் அனுமதியின்றி முஸ்லிம் கவுன்ஸிலால் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்கு எந்தவித ஆலோசனைகளும் இடம்பெறவில்லை என்றும் பல அமைப்புகள் தமது அதிருப்தியை பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் அறிவித்திருக்கின்றன.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்ற முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடனான கலந்துரையாடலில் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட ஏகோபித்த முன்மொழிவுகளை உள்வாங்கியே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் முஸ்லிம் கவுன்ஸிலுக்கு ஏதாவது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்தால் அதனை தனிப்பட்ட முறையில் எழுத்து மூலம் அறியத்தருவதே பொருத்தமானதாகும்.


ஏனெனில் நீண்டகாலமாக முடிவுக்குவராத, ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த ஒரு விடயத்தில் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பகிரங்கப்படுத்துவதனூடாக சமூகத்தில் குழப்பங்களும் அனாவசிய வாதப்பிரதி வாதங்களுமே தோன்றும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்தல் உலமா வேண்டிக்கொள்கிறது.

அல்லாஹுதஆலா எம்மனைவரையும் அவனது மார்க்கத்தையும் மார்க்க விழுமியங்களையும் பாதுகாக்கக்கூடிய நல்லடியார்களாக ஆக்கியருள்வானாக!

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விருந்துபசார நிகழ்வுகளை கண்டறிய சிறப்பு சோதனை

பாராளுமன்றம் எப்போது கூடுகிறது ? வெளியான திகதி

editor

திங்கள் முதல் பேருந்து சேவைகள் மட்டு