அரசியல்உள்நாடு

முஸ்லிம் சமூகம் தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதம் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் தலைமையில் இன்று (17.03.2025) நடைபெற்றது.

இக்குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது உரையில்….

கடந்த அரசாங்க காலங்களில் புத்தசாசன அமைச்சு, இந்து கலாசார அமைச்சு, முஸ்லிம் கலாசார அமைச்சு என இயங்கிவந்த அமைச்சுக்களை ஒன்றிணைத்து புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு என்ற நிலையில் புதிய அரசாங்கம் அமைச்சினை செயற்படுத்தி வருகின்றது.

நமது நாட்டில் வாழும் சகல இன மக்களின் மத கலாசாரங்களை பேணிப்பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இவ் அமைச்சுக்கு உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்பும் முஸ்லிம் திருமணச் சட்டத்தினை மாற்ற வேண்டும் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக பேசிக் கொள்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் மதம் தொடர்பான விடயங்களில் மாத்திரம் தொடராக இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தி இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் இது தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை, மக்கள் பிரதிநிதிகள், புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும். முஸ்லிம் சமூகம் தொடர்பான விளக்கமில்லாமல் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் வெளியிட வேண்டாம்.

கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒரு உறுதி மொழி வழங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

‘குழந்தை திருமணம் அனுமதிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை’ அமைச்சர் சரோஜா போல்ராஜ் ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதி – இவ்வாரான செய்திகளை வெளியிடுவதற்கு முன் முஸ்லிம் சமூகத்தோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அது தொடர்பான விடயங்களில் முடிவுகளை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன் இவ்வாரான சிந்தனையுடையவர்களின் சதித்திட்டங்களுக்குள் சில சுயேற்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர்களும் அகப்பட்டுள்ளனரா? என்ற எண்ணமானது சுயேற்சைக் குழு உறுப்பினரின் அண்மைக்கால உரைகளை கேட்கின்ற போது சிந்திக்கத் தோண்றுகிறது.

பல்லின சமூகம் வாழும் இந்நாட்டின் இளவயது திருமண கணக்கெடுப்பில் ஆகக் குறைந்த வீதமான திருமணம் முஸ்லிம் சமூகத்தில் இடம்பெறுவதாக உறுதியான ஆதாரத்தை கொளரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் இன்று முன்வைத்தார்.

உண்மை இவ்வாறு இருக்க போலியான செய்திகளைக் கூறி முஸ்லிம் சமூகத்தை மட்டும் தொடர்ச்சியாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கிப் பேசுவதானது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் சதித்திட்டமாகவே நோக்க வேண்டியுள்ளது.

ஆகவே, சகல சமூகங்களினது மத சுதந்திரத்திற்கும் நாம் மதிப்பளித்து செயற்படவேண்டும்.

கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக எமது முஸ்லிம் சமூகத்தின் மீது பழியினைத் தீர்க்கும் பல செயற்பாடுகளை முன்னெடுத்தார். குறிப்பாக கொரோனா காலத்தில் மரணம் அடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை உலகத்தில் இலங்கையில் மாத்திரம் இஸ்லாமிய கலாசாரங்களை மீறி எரித்தார்.

முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும், இலங்கை வக்பு சபையும் இதுவரையும் சுதந்திரமான முறையில் செயற்பட்டுக்கொண்டிருந்தன.

ஆனால் அண்மைக்கால சில செயற்பாடுகளில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் இலங்கை வக்பு சபையும் தங்களின் சுதந்திரமான செயற்பாடுகளை இழந்து அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கமைய செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் கவலையடைந்த நிலையில் உள்ளது.

சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலின் பாரம்பரியத்திற்கும் யாப்புக்கும் அமைவாக 99 மரைக்காயமார்கள் தெரிவு செய்யப்பட்டு இயங்கி வந்தனர். சென்ற 2024.04.19ம் திகதி பகிரங்கமாக சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கான புதிய நம்பிக்கையாளர் சபையினர்களை தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் 05 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

குறிப்பிட்ட தினத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தெரிவு ஒத்திவைக்கப்பட்டது.

சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் மரைக்காயர் சபை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரை தெரிவு செய்யுமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தனர். இதற்கமைய சென்ற 2025.02.10ம் திகதியிடப்பட்டு (R/748/AM/28இலக்க) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரால் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினை தெரிவு செய்யுமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

2025.02.27ம் திகதியன்று காலை 09:00 மணியிலிருந்து பி.ப 12:00 மணிவரை அம்பாரை கச்சேரியின் கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினை தெரிவு செய்வதற்கான எதுவித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்;.எம்.ஆசிக் உடனடியாக 2025.02.11ம் திகதி (CUL/MRCA/MASJID/JUMGRM/01/01)ம் இலக்க கடிதத்தினை பிரதேச செயலாளர் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்களின் பணிப்பாளருக்கு அனுப்பி உள்ளார்.

2025.02.18ம் திகதி நடைபெற்ற இலங்கை வக்பு சபையின் கூட்டத்தில் 2025.02.11ம் திகதியிடப்பட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ.ஆதம்பாவா அவர்களினால் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலுக்குரிய நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களாக 42 பேரை நியமிக்க சிபார்சு செய்துள்ளார்.

இதன்படி சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களாக 42 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் அறிவித்துள்ளதாக எம்.எல்.எம்.எச்.எம்.முகிடீன் அறிவித்துள்ளார்.

புதிதாக சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட அல்ஹாஜ் வை. அகமதுலெவ்வை (ஓய்வு பெற்ற பொது முகாமையாளர்) அவர்கள் தனக்கு அரசியல்வாதியினால் வழங்கப்பட்ட சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

நமது நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றி அமைப்போம் என்பதனை நம்பியே பெரும்பான்மையான நமது நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களித்தனர்.

ஆனால் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையினர்களை தெரிவு செய்வதற்கு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாகவே எமது இலங்கை வக்பு சபையில் அரசியல் பலத்தை பாவித்து சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு அரசியல் நியமனம் செய்துள்ளமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசேட குழு ஒன்றை நியமிக்குமாறு மக்கள் சார்பில் கேட்டுக்கொண்டார்.

எதிர்காலத்தில் நமது நாட்டில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கையாளர் சபை தெரிவு செய்யப்படுகின்ற போது தயவு செய்து அரசியல் தலையீடின்றி சுதந்திரமான நியமனத்தினை செய்வதற்கு இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திளைக்களத்திற்கும் இலங்கை வக்பு சபைக்கும் அனுமதியினை வழங்குவற்கான ஏற்பாடுகளை கௌரவ அமைச்சர் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இலங்கையிலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித நகரமான மக்காவிற்கு செல்லும் ஹஜ்ஜாஜிகளுக்கு 23,24,25 இலட்சங்கள் செலுத்த வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

முடிந்தளவு இத் தொகையினை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தால் அது பற்றி கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்ளவும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை வழி நடாத்தியவர்களை தனக்குத் தெரியுமெனவும் இந்த தகவலை ஜனாதிபதி அநுரகுமாரதிஸாநாயக்க அவர்களிடமும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் ஆகியோரிடமேக தான் கூறவிருப்பதாக ஞானசாரதேரர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, ஞானசாரதேரரை அணுகி குண்டுத் தாக்குதலுக்கான சூத்திரதாரிகளை வெளிக்கொணர்ந்து மக்களுக்கு அதனை அறிவிக்குமாறு மக்கள் சார்பில் கேட்டுக் கொண்டார்.

Related posts

கொரோனா தொற்று – அபாய வலய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 16ஆவது இடம்

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்

புதிய 4,718 அதிபர் நியமனங்கள் :கல்வி அமைச்சர்