அரசியல்உள்நாடு

முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் யார் பக்கம் இருந்தாலும் முஸ்லிம் சமூகம் சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தை பழிகொடுத்து முஸ்லிம் தலைவர்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க முற்படக்கூடாது என முன்னாள் அமைச்சர் பைஸல் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (23) அவரது கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கிறது. கட்சியின் தீர்மானத்துடனே நானும் இருக்கிறேன்.

என்றாலும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசவுடன் இருந்தாலும் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கின்றனர். இது முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் இரட்டை நிலைப்பாட்டைக்கொண்ட கொள்கையாகும். 

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஒரு பக்கம் இருந்துகொண்டு அவர்களின் ஏனைய உறுப்பினர்களை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அந்த தலைவர்கள்தான் அனுப்பியிருக்க வேண்டும்.

இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தின்போதும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் அதற்கு எதிராக வாக்களித்தபோதும் அவர்களின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவான வாக்களித்தனர்.

அதற்காக அந்த கட்சிகள் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையும் எடு்க்கவில்லை. இது முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கையாகும்.

அதனால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் சஜித் என யாருக்கும் ஆதரவளிக்க தீர்மானித்தாலும் முஸ்லிம் சமூகம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பார்த்து தீர்மானிக்காமல், சுயமாக சிந்தித்து, முஸ்லிம் சமூகத்துக்கு நாட்டுக்கும் பொருத்தமானவர் யார் என்பதை தீர்மானித்து வாக்களிக்க வேண்டும்.

அதேபோன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகத்தை பழிகொடுத்து, ஜனாதிபதி வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவளிக்க முற்படக்கூடாது.

அவர்கள் தங்களுக்கு தேவையான அமைச்சுப்பதவிகளை பேரம்பேசிக்கொள்வது எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் சமூகத்தை காட்டி, யாருக்கும் ஆதரவளிக்க முற்படக்கூடாது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இனவாதத்தை பரப்பியே தேர்தலில் வெற்றிபெற்றது. கொவிட் காலத்தில் முஸ்லிம்களின் கொவிட் தொற்றுக்குள்ளான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமையை இல்லாமலாக்கியது.

அதனால் ராஜபக்ஷ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எந்த பக்கத்தில் இருந்தாலும் அந்த தரப்புக்கு நான் ஆதரவளிக்கப்போவதில்லை.

ராஜபக்ஷவினருடன் இருந்தவர்கள் தற்போது ரணில் விக்ரமசிங்க பக்கமும் இருக்கிறார்கள் அதேபோன்று சஜித் பிரேமதாச பக்கமும் இருக்கிறார்கள்.

அதனால் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை நம்பாமல் யாருக்கும் வாக்களிப்பது என்பதை சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

புத்தளத்தில் வாழும் மன்னார் வாக்காளர்களுக்கு நிவாரணம் வழங்க அரச அதிபர் நடவடிக்கை

சுமார் 2000 பொலிஸார் விஷேட கடமையில்

கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது