உலகம்

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் : பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

(UTV | கொழும்பு) – அமெரிக்க முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் குழுவொன்று நேற்று (08) முகநூல் தளத்திற்கு (Facebook) எதிராக வழக்கொன்றினை தாக்கல் செய்துள்ளது.

முகநூல் தனது சொந்த நடுநிலைக் கொள்கைகளை செயல்படுத்தத் தவறியமை மற்றும் முஸ்லிம் விரோத வெறுப்புப் பேச்சுகளுக்கு இடமளிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாஷிங்டன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில், உலகின் மிகப்பெரிய சமூக ஊடக வலையமைப்பின் விதிகளை மீறும் வெறுக்கத்தக்க பேச்சு உள்ளடக்கத்தை அகற்றும் வகையில் முகநூல் வலையத்தளம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 1996 கூட்டாட்சி சட்டத்தின் கீழ் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகிளின் யூடியூப் சமூக ஊடக வலைதளங்கள் மீது பொதுவாக தவறான பதிவுகளை அகற்றாததற்காக அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியுமாக இருந்தது.

முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த வழக்கறிஞர்கள் குழு, பேஸ்புக் அதிகாரிகள் யு.எஸ். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகக் தெரிவித்துள்ளனர்.

வெறுக்கத்தக்க பேச்சு, துன்புறுத்தல், ஆபத்தான அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றிற்கு எதிரான நிறுவனத்தின் கொள்கைகளை பேஸ்புக் மீறுகிறது என்றும், முஸ்லிம் சமூகம் மீது குற்றம் சாட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இதனால் அதிகம் என்றும் குறித்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேஸ்புக் தளத்தின் ஊடகத் தொடர்பாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எமது வலைதளமான பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சை நாம் ஒருபோதும் அனுமதிக்காது. பேஸ்புக்கை அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்ற அதன் கூட்டாளர்களுடன் இணைந்து நாம் என்றும் செயல்படுகிறோம். பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சைக் கண்டறிந்து அவற்றை அகற்ற செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது..” எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் சமூகத் தரங்களை மீறும் பக்கங்களின் 26 குழுக்களின் பட்டியலை பேஸ்புக்கிற்கு வழங்கியதாகவும், ஆனால் குறித்த 26 குழுக்களின் பேஸ்புக் கணக்குகள் 18 இன்னும் செயலில் உள்ளதாகவும் முஸ்லிம் வழக்கறிஞர்கள் மேலும் சுட்டிக்கட்டியிருந்தனர்.

 தமிழில் : ஆர்.ரிஷ்மா 

Related posts

முதலிடத்தை பிடித்த அமெரிக்கா; ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா

பாகிஸ்தானிலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

நாளை கையெழுத்தாகவுள்ள முக்கிய ஒப்பந்தங்கள் – ட்ரம்ப்