உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம்கள் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழு- இப்தார் நிகழ்வில் ரணில்

 

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரது இறுதி விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் இவை தொடர்பான சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலில் நேற்று (07) இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ரமழான் நோன்பைக் கூட சரியாக நோற்க முடியவில்லை.

கடந்த வருடம் முதல் பொருளாதாரம் மேம்பட்டு வருவதால், இன்று வழக்கம் போல் ரமழான் நோன்பு காலத்தை கழிக்கவும், ரமழான் நோன்பை நோற்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

ரமழானின் போது முஸ்லிம் சமூகம் சிறப்பாக நோன்பை நோற்று நற்பண்புகளை வளர்த்துக் கொள்கிறது. ரமழான் பண்டிகையும் சிங்களப் புத்தாண்டும் ஒரே சமயத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.இன, மத பேதமின்றி செயற்படக்கூடிய கலாசாரம் வரலாற்றில் இருந்து இந்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது கல்வி அமைச்சின் கீழ் பிரிவெனாக் கல்வி முறைப்படுத்தப்படுவது போன்று மத்ரஸா பாடசாலை கல்வியையும் கல்வி அமைச்சின் கீழ் மேற்பார்வை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் இஸ்லாமிய புத்தகங்களை தருவிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள தடைகளை கண்டறிந்து அவற்றை நீக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த கொரோனா தொற்றுநோயின் போது, முஸ்லிம் சமூகம் தங்களின் இறுதிச் சடங்குகளை முறையாகச் செய்ய முடியாமல் மிகவும் வேதனையான சூழ்நிலையைச் சந்தித்தது. அந்த நிலையை எதிர்காலத்தில் மாற்றியமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

மத ரீதியாகவோ அல்லது இறுதி உயில் மூலமாகவோ யாரேனும் தங்கள் விருப்பப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யக்கூடிய சட்டங்கள் எதிர்காலத்தில் தயாரிக்கப்படும். அடக்கம் அல்லது தகனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அவரவர் விருப்பப்படி செயற்படத் தேவையான விதிகளை நாங்கள் தயார் செய்வோம்.

இலங்கை மக்கள் இன்று ரமழான் நோன்பை அனுஷ்டிக்கின்ற போதும் காஸா பகுதியில் மிகவும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகம் சுமார் முப்பத்தைந்தாயிரம் உயிர்களை இழந்துள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு தேசிய இப்தார் நிகழ்வை நடத்தாதிருக்க முடிவு செய்யப்பட்டதோடு அந்த பணத்தை காஸா முஸ்லிம் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் காஸா பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதாகவும் உறுதியளித்துள்ளோம். பலஸ்தீன அரசை கலைப்பதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். எனவே, இந்தப் போரை நிறுத்துவதற்கு எமது ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காத்தான்குடி பள்ளிவாசலினால் 10 மில்லியன் ரூபாவும், கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசலினால் 2.2 மில்லியன் ரூபாவும், முஸ்லிம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களினால் 3.5 மில்லியன் ரூபாவும் காஸா முஸ்லிம் சமூகத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

கண்டி, கட்டுகெலே ஜும்மா பள்ளிவாசல் பிரதம மௌலவி சையித் மௌலானா, அமைச்சர் மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, அனுராத ஜயரத்ன, திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

தோட்டத் தொழிலார்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு [VIDEO]

எட்டாவது பாராளுமன்றத்தின் 4வது தொடர் நாளை மறுதினம்

டிசம்பர் 31க்கு முன்னர் வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு