அரசியல்உள்நாடு

முழு நாட்டுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் – டலஸ் அழகப்பெரும

முக்கியத்துவம் மிக்க சர்வதேச மாநாடுகளைப் புறக்கணித்து தற்போதைய அரசாங்கம் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இது சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி முழு நாட்டுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி அலுவலகத்தில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் இதுவரையில் சிறந்த வெளிநாட்டு கொள்கைகள் பின்பற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற ஒரு மாதத்துக்குள் மூன்று பிரதான இராஜதந்திர சர்வதேச மாநாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு, பிரிக்ஸ் மாநாடு என்பவற்றை இந்த அரசாங்கம் புறக்கணித்துள்ளது.

அரசாங்கம் அதன் வெளியுறவுக் கொள்கைகளை பலப்படுத்தியிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கிறது.

ஜனாதிபதி அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்றிருக்க வேண்டிய இந்த மாநாடுகளில் வெளியுறவுச் செயலாளரும், மேலதிக செயலாளரும் தூதுவருமே பங்கேற்றுள்ளனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயமல்ல. இது சர்வதேசத்தின் மத்தியில் அரசாங்கத்துக்கு மாத்திரமின்றி முழு நாட்டுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும்.

சர்வதேச ஒத்துழைப்புக்கள் அத்தியாவசியமாகவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான மாநாடுகளை புறக்கணிப்பது தவறானதாகும். வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இவ்வாறு சவாலுக்கு உட்படுத்தப்படவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு பாதமான பக்கத்தையே இவை காண்பிக்கின்றன. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் அது பெரும் அழிவுக்கு வழி வகுக்கும் என்றார்.

-எம்.மனோசித்ரா

Related posts

திங்கள் முதல் 6 – 9 வரையிலான தரங்கள் ஆரம்பிக்கப்படும்

இன்று உருவாகவுள்ள நிசர்கா

ஏப்ரல் 21 தாக்குதல் : சாட்சி நடவடிக்கைகள் ஒத்திவைப்பு