உள்நாடு

முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுங்கள்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் இந்தக் காலப் பகுதியில் ஜனாதிபதி வேட்பாளர்கள், பொது மக்கள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு இன்று (26) முற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

பாதூகப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அத்துடன், அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

அதேநேரம், கடந்த இரண்டு வருடங்களில் மிகவும் சிக்கலான காலப்பகுதியில் அமைச்சு என்ற ரீதியில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்ததாகவும், அக்காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகல தரப்பினருக்கும் ஜனாதிபதி சார்பில் நன்றி தெரிவித்த பிரமித்த பண்டார தென்னக்கோன், பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள சகல நிறுவனங்களின் செயற்பாடுகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.

முப்படைகளையும் மேலும் பலப்படுத்துவது தொடர்பான விடயங்களும், பாதுகாப்பு அமைச்சுத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

சீனாவின் சேதன பசளை இறக்குமதிக்கு தடை

ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி – சரவணராஜா.

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு